சண்டிகர்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்காவும் அரசியல் அனுபவம் அற்றவர்கள் என பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஞ்சாப் மாநிலத்துக்கு நவ்ஜோத் சிங் சித்து போன்ற தலைவர்களால் ஆபத்து மட்டுமே ஏற்படும் என்றார்.
ராகுல் குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்து காங்கிரஸ் கட்சி வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சித்துவும் அவரது ஆதரவாளர்களும் போர்க்கொடி தூக்கியதன் காரணமாகவே அமரீந்தர் முதல்வர் பதவியில் இருந்து விலக நேரிட்டது. அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் சித்து போட்டியிட்டால் அவரை தோற்கடிக்க எத்தகைய தியாகத்தையும் செய்யத் தாம் தயாராக இருப்பதாக கூறியுள்ளார் அமரீந்தர் சிங்.
சித்துதான் முதல்வர் வேட்பாளர் என்று கூறப்படுவதை ஏற்க இயலாது என்றும் தேர்தல் களத்தில் அவருக்கு எதிராக வலுவான வேட்பாளரை தாம் களமிறக்கப் போவது உறுதி என்றும் அமரீந்தர் கூறினார்.
"மூன்று வாரங்களுக்கு முன்பே நான் பதவி விலகத் தயார் என்று கூறிவிட்டேன். ஆனால் சோனியா காந்தி தான் பதவியில் நீடிக்குமாறு கூறினார். ராகுலும் பிரியங்காவும் அனுபவம் இல்லாதவர்கள் என்பதால் ஒருசிலர் இருவரையும் தவறாக வழிநடத்துகிறார்கள்," என்றார் அமரீந்தர் சிங்.

