செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
3607caec-52a4-4871-9081-a132037b24af
-

ஆசிய வளர்ச்சி வங்கி: இந்திய பொருளாதாரம் 10% வளர்ச்சி காணும்

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 10 விழுக்காடாக இருக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய பொருளாதார வளர்ச்சி 11 விழுக்காடாக இருக்கும் என அந்த வங்கி கணிப்பு வெளியிட்டிருந்தது. கொரோனா இரண்டாவது அலையால் பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதன் காரணமாக வளர்ச்சி அளவைக் குறைத்துள்ளதாக ஆசிய வளர்ச்சி வங்கி கூறியுள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டின் மீதமுள்ள இரு காலாண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் மீண்டும் வலுவுடன் மீண்டெழும் என நம்புவதாக ஆசிய வளர்ச்சி வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

பத்மநாப சுவாமி கோவில் கணக்கு தணிக்கை: உச்ச நீதிமன்றம் கெடு

திருவனந்தபுரம்: கேரளாவின் புகழ்பெற்ற பத்பநாப சுவாமி கோவிலின் 25 ஆண்டுகால கணக்குத் தணிக்கையை மூன்று மாதங்களுக்குள் முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. இது தொடர்பாக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் அறக்கட்டளை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அதில், கணக்குத் தணிக்கைக்கு அவசியமில்லை என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், வழக்கு விசாரணை முடிவடைந்ததை அடுத்து உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியது. கோவிலின் 25 ஆண்டு கால கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டும் என்றும் அரச குடும்பத்தின் அறக்கட்டளைக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என்றும் தீர்ப்பில் திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அடுத்த மூன்று மாதங்களுக்குள் தணிக்கை பணியை முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆதார் அட்டை தகவல்கள்: சீன ஊடுருவல்காரர்களால் பாதிப்பு இல்லை

புதுடெல்லி: இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆதார் அட்டை தகவல்களை சீனாவைச் சேர்ந்த இணைய ஊடுருவல்காரர்கள் திருடிவிட்டதாக வெளியான செய்தி உண்மையல்ல என்று அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் இணைய பாதுகாப்பு நிறுவனமான 'இன்சிக்ட்' எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆதார் தகவல்கள் மட்டுமல்லாமல், பிரபல ஆங்கில ஊடக குழுமத்தின் கணினி அமைப்புகளுக்குள் நுழைந்து இணைய ஊடுருவல்காரர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது. இந்நிலையில், ஆதார் தகவல்கள் திருட்டுப் போகவில்லை என இந்திய தேசிய அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது. பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் இணைய ஊடுருவல்காரர்களால் ஆதார் கணினி அமைப்புக்குள் ஊடுருவ முடியாது என அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்றங்களில் 60% நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் சுமார் அறுபது விழுக்காடு நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரியவந்துள்ளது. உயர் நீதிமன்றங்களில் மொத்தம் 1,080 நீதிபதிகளுக்கான பணியிடங்கள் உள்ளன. இப்போது நாடு முழுவதும் 420 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். இதற்கிடையே நீதின்றங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. எனவே காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனும் கோரிக்கை வலுத்து வருகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த ஏப்ரலில் என்.வி.ரமணா பதவியேற்றார். அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தில் காலியாக இருந்த நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்பட்டன. உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கான மொத்த பணியிடங்கள் 34 ஆகும். இப்போது 33 நீதிபதிகள் உள்ளனர்.

ரூ.25 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: இரு பெண்கள் கைது

மும்பை: தென்னாப்பிரிக்காவில் இருந்து கத்தார் தலைநகர் தோஹா வழியாக கடத்தி வரப்பட்ட ரூ.25 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வெளிநாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கைதாகினர். இருவரது நடவடிக்கைகளும் சந்தேகத்தை ஏற்படுத்தியதை அடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது இருவரும் தங்களது உடைமைகளுக்கு மத்தியில் ஐந்து கிலோ ஹெராயினை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அனைத்துலகச் சந்தை மதிப்பு 25 கோடி ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.