கோல்கத்தா: பாஜக வன்முறையைத் தூண்டும் கட்சி என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் தாம் போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே தம்மால் மாநில முதல்வராக நீடிக்க முடியும் என்றும் மக்களுக்கு மாநில அரசின் வழி சேவையாற்ற முடியும் என்றும் கூறினார்.
"பாஜகவைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளில் கூட வெடிகுண்டுகளை வைத்துள்ளனர். அப்படிப்பட்டவர்கள் மீது யார் தாக்குதல் நடத்த முடியும்?
"பாஜகவினரைத் தொட்டுப் பேசக்கூட நாங்கள் வெட்கப்படுகிறோம்," என்றார் முதல்வர் மம்தா பானர்ஜி.
திரிணாமூல் காங்கிரஸ் ரவுடி கட்சி அல்ல என்று குறிப்பிட்ட அவர், அக்கட்சியில் முதல்வராகப் பதவியேற்க தகுதி உள்ள தலைவர்களுக்குப் பஞ்சமில்லை என்றார்.
எனினும், தாம் முதல்வராக தொடர வேண்டும் என விரும்பினால், மேற்கு வங்கத்தில் பெய்து கொண்டிருக்கும் கனமழையை மீறி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து தமக்கு வாக்களிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டார்.
மேற்கு வங்கத்தில் பாஜக தொண்டர் ஒருவர் இறந்துவிட்டதை பெரிதுபடுத்தும் அக்கட்சியினர், அசாம் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் பலர் கொல்லப்பட்டது குறித்து மட்டும் ஏன் ஏதும் பேசவில்லை என கேள்வி எழுப்பினார்.
"அசாமில் சட்டம் ஒழுங்கு என்பது அறவே இல்லை. இதை நினைத்து உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
"எனவே, புயல் வீசினாலும் கூட பவானிபூர் தொகுதி மக்கள் எனக்கு வாக்களிக்க தேர்தல் நாள் அன்று வீட்டை விட்டு வெளியே வர வேண்டும்," என்று முதல்வர் மம்தா பானர்ஜி மேலும் கூறினார்.
நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டார் மம்தா. இதையடுத்து பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் அவர் மீண்டும் களமிறங்கி உள்ளார்.

