பெங்களூரு: மூன்று மாடிக் கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது அந்தக் கட்டடத்தில் இருந்த ஐம்பது பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
லக்கசந்த்ரா பகுதியில் இருந்த அந்தக் கட்டடம் சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பலர் அங்கு தங்கி இருந்தனர்.
நேற்று கட்டடம் திடீரென அதிரத் தொடங்கியதும், அத்தொழிலாளர்கள் ஏதோ ஆபத்து நிகழப்போவதை உணர்ந்து அடுத்த சில நொடிகளில் அதிலிருந்து மின்னல் வேகத்தில் வெளியேறினர். மேலும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அடுத்த ஓரிரு நிமிடங்களில் கட்டடம் முழுமையாக இடிந்து விழுந்தது. எனினும் இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
கட்டடம் இடிந்து விழுந்ததற்கான கார ணம் என்ன என்பது தெரியவில்லை. இது தொடர்பான காணொளிப் பதிவு சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
சில நிமிடங்கள் தாமதித்து இருந்தாலும் உயிரிழக்க நேர்ந்திருக்கும் என விபத்தில் தப்பிய தொழிலாளர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

