ஐநாவில் மோடி உரையை யாரும் பாராட்டவில்லை என சிதம்பரம் வருத்தம்
புதுடெல்லி: ஐநா பொது பேரவையில் பிரதமர் மோடி உரையாற்றியபோது, பெரும்பாலான உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் அவையில் இல்லை என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். ஐநா நிரந்தர உறுப்பு நாடு என்ற இந்தியாவின் மதிப்பு இப்போது புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் உரைக்கு எவரும் குறைந்தபட்ச பாராட்டைக் கூட தெரிவிக்காதது தமக்கு ஏமாற்றம் அளித்துள்ளதாக ப.சிதம்பரம் மேலும் தெரிவித்துள்ளார்.
கரையைக் கடந்தது 'குலாப்' புயல்
புவனேஸ்வர்: அண்மையில் வங்கக்கடல் பகுதியில் உருவான குலாப் புயல் ஆந்திராவில் கரையைக் கடந்தது. அச்சமயம் 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்ததுடன் பெருங்காற்றும் வீசியது. பல இடங்களில் மரங்களும் மின் கம்பங்களும் வேரோடு சாய்ந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஆந்திர மீனவா்கள் சென்ற படகு கடலில் கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பலத்த காற்று வீசியதால் படகு கவிழ்ந்தது.
விசா அளிக்காத சீனாவின் போக்கு ஏமாற்றமளிப்பதாக இந்தியா புகார்
புதுடெல்லி: சீனாவில் படித்துக்கொண்டிருக்கும் இந்திய மாணவர்கள், தொழிலதிபர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் ஆகியோர் அங்கு திரும்புவது இருதரப்பு தூதரக நிலைப்பாடு சாராத, மனிதாபிமான பிரச்சினை என்று சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். சீனா திரும்புவதற்கு அனுமதி கிடைக்காததால், அவர்கள் அனைவரும் கடந்த எட்டு மாதங்களாக இந்தியாவில் தவித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியர்கள் சந்தித்து வரும் பிரச்சினையில் அறிவியலுக்குப் பொருந்தாத அணுகுமுறையை சீனா பின்பற்று வது ஏமாற்றம் அளிக்கிறது," என்றார் விக்ரம் மிஸ்ரி.
மேற்கு வங்க வாக்காளராக பெயரைப் பதிவு செய்த பிரசாந்த் கிஷோர்
கோல்கத்தா: தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் மேற்கு வங்கத்தில் தமது பெயரை வாக்காளராகப் பதிவு செய்துள்ளார். அங்கு அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அவர் திரிணாமூல் காங்கிரசின் ஆலோசகராக செயல்பட்டார். அப்போது தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டியிருந்ததால், மேற்கு வங்கத்திலேயே தங்க நேரிட்டது. இதனால் அங்கிருந்து வெளியேற்றும்படி பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க வாய்ப்புள்ளது என்பதைக் கவனத்தில் கொண்டு அவர் வாக்காளராகப் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

