புதுடெல்லி: 'ஆயுஷ்மான் பாரத்' என்ற தேசிய மின்னிலக்க சுகாதார திட்டமானது இந்தியாவின் சுகாதார கட்டமைப்புகளில் புரட்சிகர மாற்றத்தைக் கொண்டுவரும் சக்தி கொண்டது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நேற்று இத்திட்டத்தை தொடக்கி வைத்துப் பேசிய அவர், இந்திய மருத்துவத்துறையில் புதிய அத்தியாயம் எழுதப்பட உள்ளதாகக் குறிப்பிட்டார்.
புதிய சுகாதார திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள அனைவருக்கும் தனித்தனி அடையாள அட்டைகள் உருவாக்கப்படும் என்றும் அதன் மூலம் ஒருவரது உடல்நலம் குறித்த விவரங்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும் என்றும் மோடி குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தின்மூலம், சுமார் 900 மில்லியன் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தச் சாதனைக்கு 'கோவின் செயலி'யின் பங்கு மிக முக்கியமானது. தடுப்பூசிக்குப் பதிவு செய்வதில் தொடங்கி சான்றிதழ் வழங்குவதுவரை அனைத்தும் மிகச் சரியாக செயல்படுத்தப்பட்டது என்றும் இதேபோன்று புதிய மின்னிலக்க சுகாதாரத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றும் அவர் கூறினார்.
"புதிய திட்டத்தின் கீழ் அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் மின்னிலக்க சுகாதார எண் ஒதுக்கப்படும். அவர்களைப் பற்றிய அனைத்து சுகாதார தகவல்களும் மின்னிலக்க முறையில் பாதுகாப்பாக வைக்கப்படும். கடந்த ஏழு ஆண்டுகளில் சுகாதார வசதிகளை வலுப்படுத்தும் புதிய கட்டத்திற்குள் நாடு நுழைகிறது.
"இதன் மூலம் ஏழை, நடுத்தர வர்க்க மக்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதில் உள்ள சிக்கல்கள் நீங்கும்," என்றார் மோடி.
முன்னதாக தமது டுவிட்டர் பதிவு ஒன்றில், நவீன மின்னணு தொழில்நுட்பங்கள் வாயிலாக மருத்துவ சேவைகளை மக்கள் எளிதாக பெற வழிவகுப்பதே மின்னிலக்க மருத்துவத் திட்டம் என்று மோடி குறிப்பிட்டிருந்தார்.
தனிநபர் பெற்ற மருத்துவ சிகிச்சைகள் உள்பட மருத்துவர் சார்ந்த தகவல்கள் அடங்கிய களஞ்சியமாக தேசிய மின்னிலக்க சுகாதார அட்டை இருக்கும் என்றும் மருத்துவர்களும் மருத்துவமனைகளும் உரிய மருத்துவ சேவைகளை வழங்க ஏதுவாக இந்த அட்டை குடிமக்களுக்குத் தரப்படுகிறது.
ஏற்கெனவே ஆறு யூனியன் பிரதேசங்களில் மின்னிலக்க சுகாதாரத் திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்போது நாடு முழுவதும் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

