இந்தியர்களின் சராசரி உயரம் குறைந்து வருகிறது

இந்தியர்களின் சராசரி உயரம் குறைந்து வருகிறது

1 mins read
121a2c0e-aaa9-4a7a-a575-738ab4caf76c
படம்: ஃபிரீ ஐகான்ஸ் லைப்ரரி -

புதுடெல்லி: உலகம் முழுவதும் மக்களின் சராசரி உயரம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியர்களின் சராசரி உயரம் குறைந்து வருகிறது.

இந்தப் போக்கு அச்சமூட்டும் வகையில் இருப்பதாக '1995 முதல் 2015 வரை வயதுவந்த இந்தியர்களின் உயரம்: தேசிய குடும்ப, சுகாதார ஆய்வுச் சான்றுகள்' என்ற அண்மைய ஆய்வு தெரிவிக்கிறது.

"இந்தியர்களின் சராசரி உயரம் குறைந்து வருவது உடனடியாக கவனிக்கப்பட வேண்டும்," என்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உணவு, வாழ்க்கைத்தரம், சுகாதாரப் பராமரிப்பு போன்ற மரபணு சாராக் காரணிகளும் உயரத்தை முடிவுசெய்வதில் பெரும்பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது.

2005-06 முதல் 2015-16 இடையிலான பத்தாண்டு இடைவெளியில் இந்தியர்களின் உயரம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

அதில், 15-25 வயதுப் பெண்களின் சராசரி உயரம் 0.12 செ.மீ. குறைந்ததையும் அதே வயதுப் பிரிவிலுள்ள பழங்குடியினப் பெண்களின் உயரம் 0.42 செ.மீ. குறைந்ததையும் தரவுகள் காட்டின.

இதே வயதுப் பிரிவிலுள்ள ஆண்களின் உயரம் சராசரியாக 1.10 செ.மீ. குறைந்துள்ளது.

"ஐந்து வயதுச் சிறுமியரை எடுத்துக்கொண்டால், மற்ற இனத்தினரைக் காட்டிலும் பழங்குடியினச் சிறுமியரின் உயரம் சராசரியாக 2 செ.மீ. குறைவாக உள்ளது. ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளும் சமுதாய, பொருளியல் நிலைகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது," என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.