புதுடெல்லி: நீதிமன்ற வளாகத்தில் இரு ரவுடி கும்பல்களுக்கு இடையேயான மோதலை அடுத்து நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஜிதேந்தர் என்ற ரவுடி சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் இருவர் கைதாகி உள்ளனர்.
ஜிதேந்தருக்கும் தில்லு தாஜ்புரியா என்ற மற்றொரு ரவுடிக்கும் இடையே மோதல் நீடித்து வந்துள்ளது.
இந்நிலையில், ஒரு வழக்கில் சிக்கி தாஜ்புரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஒரு வழக்கு விசாரணைக்காக ஜிதேந்தர் நீதிமன்றத்தில் முன்னிலையாவது குறித்து தகவலறிந்த தாஜ்புரியா, தனது ஆட்களை ஏவியுள்ளார்.
அவர்கள் கடந்த 24ஆம் தேதி டெல்லியின் ரோகிணி நகர்ப் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஜிதேந்திராவை சுட்டுக்கொல்ல முயன்றனர். இரு ரவுடி கும்பல்களும் நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதையடுத்து, போலிசாரும் பதிலடி கொடுத்தனர்.
இதனால் நீதிமன்றத்தில் கூடியிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். எனினும், ஜிதேந்தர் மான் கோகி உயிரிழந்தார். இந்த மோதல் குறித்து சிறையில் இருந்த தாஜ்புரியாவுக்கு நேரலை வர்ணனை போல் கைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் டெல்லி சிறைகளில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.