ஜெய்ப்பூர்: அழைப்புக் கருவிகள் பொருத்தப்பட்ட காலணிகள் மூலம் 'ரீட்' எனப்படும் இந்தியாவின் ராஜஸ்தான் மாநில ஆசிரியர் தகுதித்தேர்வில் தில்லுமுல்லு செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதன் தொடர்பில் ராஜஸ்தான் காவல் துறையினர் 40 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பிகானெர் நகரில் 'புளூடூத்' அழைப்பு வசதியுடன் கூடிய செருப்பு அணிந்திருந்த ஐவர் கும்பலைக் காவலர்கள் கைதுசெய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், ஆறு லட்ச ரூபாய்க்கு அத்தகைய செருப்புகள் விற்கப்பட்டது தெரியவந்தது.
"செருப்பின் அடிப்பகுதியில் ஒரு மின்கலமும் ஒரு சிம் அட்டையும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. கேள்விகளுக்கான விடையைக் கேட்டறிய உதவியாக, புளூடூத் வசதிகொண்ட நுண்ணிய கருவி, தேர்வெழுதிய மாணவர்களின் செவிக்குள் பொருத்தப்பட்டிருந்தது," என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர், பணியிடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் ஆவார்.
துளசிராம் காலெர் என்பவர்தான் இந்த மோசடியின் மூளையாகச் செயல்பட்டவர் என்பதைக் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். பயிற்சி மையம் நடத்தி வரும் அவர், இதுபோன்ற மோசடிகளுக்காக ஏற்கெனவே கைதானவர். அவர் தலைமறைவாகிவிட்டார்.