பெங்களூரு: கட்டாய மதமாற்றுக்கு எதிராக சட்டம் கொண்டு வருவதைக் குறித்து கர்நாடகா அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் "அங்குமிங்குமாக அத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன. கட்டயமாகவோ, வற்புறுத்தியோ ஒருவரை மதம் மாற்றுவது சட்டவிரோதமாகும்.
"இதனை அனுமதிக்க வேண்டாம் என்று சில நாட்களுக்கு முன்பு மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்," என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 13 முதல் 24 வரை நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் இந்தப்பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இம்மாதம் 20ஆம் தேதி பேசிய ஹோசா துர்காவைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினரான கூலிஹாட்டி டி ஷேகர், தன்னுடைய தாயையும் மூளைச்சலவை செய்து மதம் மாற்றிவிட்டார்கள் என்று கூறினார்.
இதையடுத்து இப்பிரச்சினைக்கு முடிவுகட்ட சட்டம் இயற்றுவதை குறித்து கர்நாடகா பரிசீலித்து வருவதாக இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் தெரிவித்தது.
பாரதிய ஜனதா கட்சி ஆளும் உத்தரபிரேதசம், ஹிமாச்சலபிரதேசம், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் ஏற்கெனவே கட்டாய மதமாற்றுக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்திலும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடக்கிறது.

