திருமலை: திருப்பதி ஏழுமலை யானுக்கு ஆகம முறைப்படி பூஜை நடக்கிறதா என்று உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
பொதுநல வழக்கு ஒன்றை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று திருப்பதி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அபிஷேகம், தோமாலை சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், ஏகாந்த உற்சவங்கள் ஆகம சாஸ்திரங்களின்படி நடப்பதில்லை எனவும் தவறான முறையில் மகா லகு தரிசனத்திற்கு தேவஸ்தானம் பக்தர்களை அனுமதித்து வருவதாகவும் உற்சவ மூர்த்திகளை தவறான முறையில் கையாளப்படுவதா கவும் ஸ்ரீவாரி தாதா என்ற பக்தர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்திருந்ததாக 'இந்து தமிழ் திசை' தெரிவித்தது.
இந்த வழக்கு புதன்கிழமை அன்று விசாரணைக்கு வந்தது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, சூர்யகாந்த், ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது.
அப்போது பேசிய தலைமை நீதிபதி என்.வி. ரமணா, ''நானும் திருப்பதி ஏழுமலையானின் பக்தர்களில் ஒருவனே. அவரின் மகிமையை இவ்வுலகம் அறியும். பூஜைகளில் தவறு இருந்தால் அவர் மன்னிக்க மாட்டார்,'' என்று தெலுங்கில் கூறினார். இதையடுத்து ஆகம முறைப்படி பூஜைகள் நடக்கிறதா என்பது குறித்து வரும் அக்டோபர் 6ஆம் தேதி விளக்கம் அளிக்கும்படி திருப்பதி தேவஸ்தானத்துக்கு அவர் உத்தரவிட்டார்.
இதற்கு முன்பு இந்த வழக்கு ஆந்திர உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஆகம விதி, பூஜை முறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் அதே பக்தர் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

