புதுடெல்லி: நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் இதுவரை 69 விழுக்காட்டினருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், மொத்த மக்கள் தொகையில் சுமார் 25 விழுக்காட்டினருக்கு, அதாவது 237 மில்லியன் பேருக்கு இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள தடுப்பூசி மையங்களில் 64.1 விழுக்காட்டினருக்கும் நகர்ப்புற மையங்களில் 35 விழுக்காட்டினருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள சுகாதார அமைச்சு கிராமப்புறம், நகர்ப்புறம் எனப் பிரிக்கப்படாத தடுப்பூசி மையங்களில் 0.88 விழுக்காடு தடுப்பூசி போடப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தினமும் சராசரியாக 1.5 மில்லியன் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன.
இதற்கிடையே இந்தியாவின் தடுப்பூசித் திட்டத்தில் மூன்றாவதாக ஸைடஸ் கெடிலா நிறுவனத்தின் 'ஸைகோவ்-டி' என்ற புதிய கொரோனா தடுப்பு மருந்து சேர்க்கப்படுகிறது.
இத்தகவலை மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.
தற்போது கோவேக்சின், கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள் இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
மூன்றாவதாக இணைய உள்ள 'ஸைகோவ்-டி' ஊசியில்லா தடுப்பு மருந்தாகும்.
இதன் விலை குறித்து தயாரிப்பு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் மற்ற இரு தடுப்பூசிகளுடன் ஒப்பிடுகையில் இந்தத் தடுப்பு மருந்தின் விலை மாறுபட்டதாக இருக்கும் என்றும் ராஜேஷ் பூஷண் கூறியுள்ளார்.

