புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
விவசாயிகளின் இந்தச் செயல்பாடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி கடந்த ஓராண்டு காலமாக ஏராளமான விவசாயிகள் டெல்லியின் புறநகர்ப் பகுதியில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனால் டெல்லியிலும் அதன் எல்லையோரப் பகுதிகளிலும் போக்குவரத்து தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.
புதிய வேளாண் சட்டங்களை ஆராய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரியில் அமைத்தது.
இந்நிலையில், விவசாயிகளின் போராட்டம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, போராட்டம் நடத்துவது விவசாயிகளின் உரிமை என்றாலும் அதற்காக மக்கள் பயன்படுத்தக் கூடிய நெடுஞ்சாலைகளை அவர்கள் எப்படி நீண்ட காலமாக அடைத்து வைக்க முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், விவசாயிகளின் பிரச்சினையைத் தீர்க்க, மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் நீதிபதிகள் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், மத்திய அரசு உயர்நிலை குழு அமைத்த போதிலும் அந்தக் குழு கூட்டிய கூட்டத்தில் பங்கேற்க விவசாயிகள் மறுத்து விட்டதாகக் குறிப்பிட்டார்.
இதையடுத்து விவசாயிகள் தங்களுக்குள்ள மனக்குறைகளை நாடாளுமன்ற விவாதங்கள் அல்லது நீதிமன்றங்கள் வாயிலாக தீர்த்துக் கொள்ள முடியும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

