புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் விவகாரம் என்பது குறிப்பிட்ட வட்டார அளவில் மட்டுமல்லாமல், அதையும் கடந்து உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க, இந்திய பாதுகாப்பு கூட்டாண்மை மன்றத்தின் உச்ச மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், தலிபான்கள் வழங்கியுள்ள பல்வேறு வாக்குறுதிகளில் இந்தியா நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
ஆப்கானிஸ்தானில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை நாம் எதிர்பார்க்க முடியுமா என்பது தெரியவில்லை என்றும் அங்கு பெண்களுக்கு, குழந்தைகளுக்கு, சிறுபான்மையினருக்கு மதிப்பு கிடைக்குமா என்பதை உலக நாடுகள் கவனிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
"ஆப்கானிஸ்தான் மண்ணை எந்தவிதமான பயங்கரவாதச் செயலுக்கும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என தலிபான்கள் கூறியது நடக்குமா எனப் பார்க்க வேண்டும். அங்குள்ள தற்போதைய நிலவரமானது உலக அளவில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதை நாம் காண நேரிடும்," என்றார் அமைச்சர் ஜெய்சங்கர்.

