புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து நடைபெற்ற சூதாட்டம் தொடர்பாக பத்து பேரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.
தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் இந்தப் போட்டியை முன்வைத்து கோடிக்கணக்கில் சூதாட்டம் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்படுவதும் வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தை முன்னிட்டு டெல்லியில் மிகப்பெரிய அளவில் சூதாட்டம் நடைபெறுவதாக போலிசாருக்கு தகவல் கிடைத்தது.
டெல்லியில் இருந்தபடி பல்வேறு மாநிலங்களில் உள்ளவர்களைத் தொடர்புகொண்டு சூதாட்ட முகவர்கள் பந்தயம் கட்டியுள்ளனர்.
இதற்காக பத்து மடிக்கணினிகள், 38 கைபேசிகள், மூன்று பெரிய தொலைக்காட்சிப் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன.
டெல்லியின் புறநகர்ப் பகுதியில் முகாமிட்டு சூதாட்ட முகவர்கள் லட்சக்கணக்கான மதிப்புள்ள பந்தயங்களைக் கையாண்டது தெரிய வந்துள்ளது.
தகவல் அறிந்த போலிசார் முகவர்கள் இயங்கிய இடத்துக்குச் சென்றபோது பத்து பேர் பிடிபட்டனர். அங்கிருந்த அனைத்துப் பொருள்களையும் போலிசார் பறிமுதல் செய்தனர். 50 லட்சம் ரூபாய் மதிப்பில் சூதாட்டம் நடந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.