உலகச் செல்வந்தர்கள், தலைவர்களின் சட்டவிரோத சொத்துகள் அம்பலம்

2 mins read
290faddf-6f96-4936-bf64-b4b31af57578
இந்திய கிரிக்கெட் சகாப்தம் சச்சின் டெண்டுல்கர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். படம்: இந்திய ஊடகம் -

சட்டவிரோதமாகவும் ரகசியமாகவும் வரி ஏய்ப்பு செய்தும் வெளிநாடுகளில் சொத்துகளைப் பதுக்கிய உலகச் செல்வந்தர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்களின் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் 300க்கும் அதிகமான இந்தியர்கள் வெளிநாடுகளில் சொத்துகளைப் பதுக்கிச் சேர்த்ததாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

குறிப்பாக அனில் அம்பானி, சச்சின் டெண்டுல்கர், நடிகர் ஜாக்கி ஷ்ராஃப் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டவர்கள் பிரபலமானவர்கள் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் கூறியது.

இவர்களில் திவாலாகிவிட்டதாகக் கூறியுள்ள அனில் அம்பானி சுமார் 1.3 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகளை வெளிநாடுகளில் 18 வெளிநாட்டு நிறுவனங்களில் பதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

செல்வந்தர்களின் ரகசிய சொத்துகளை அம்பலப்படுத்தும் இந்த சுமார் 11.9 மில்லியன் ஆவணங்கள் பாண்டோரா பேப்பர்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. அவற்றை உலகின் 115 செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த 600 செய்தியாளர்கள் ஓராண்டாகப் புலனாய்வு செய்து வெளியிட்டுள்ளனர். இந்த ஆவணங்களைப் புலனாய்வுச் செய்தியாளர்களின் அனைத்துலகக் கூட்டமைப்பு எனும் அமைப்பு பெற்றது.

இந்த ஆவணங்களில் முன்னாள், இந்நாள் தேசியத் தலைவர்கள் 35 பேருக்கும் 91 நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த 330க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பதாக கூட்டமைப்பு கூறியது.

பனாமா, துபாய், மொனோக்கோ, சுவிட்சர்லாந்து, கேமன் தீவுகள், அமெரிக்காவின் தெற்கு டக்கோட்டா மாநிலம் போன்ற வரி செலுத்தத் தேவையில்லாத இடங்களில் இவர்கள் ரகசியமாக போலி நிறுவனங்களை அமைத்து சொத்துகளை வாங்கிக் குவித்ததாகக் கூறப்பட்டது.

இந்த வட்டாரத்தில், குறிப்பாக இந்தோனீசியப் பொருளியல் ஒருங்கிணைப்பு அமைச்சர் ஆயர்லங்கா ஹார்ட்டோடோ, கடல்துறை, முதலீட்டுக்கான அமைச்சர் லுஹுட் பாண்ட்ஜய்தான் ஆகியோரது பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மலேசிய முன்னாள் நிதி அமைச்சர் டாயிம் ஸைனுதீன் ஆகியோரின் குடும்பத்தினர் ரகசிய சொத்துகளைச் சேர்த்ததாகக் கூறப்பட்டது.

ஜோர்தான் மன்னர், அஸர்பைஜான், கென்யா, செக் குடியரசு உள்ளிட்ட நாட்டுத் தலைவர்கள் பல நூறு மில்லியன் டாலர் சேர்த்து வைத்துள்ளதாக அதில் கூறப்பட்டது.