ஹைதராபாத்: இந்தியாவைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் மலேரியா பாதிப்பை தடுப்பதற்கான தடுப்பூசியின் ஒரு பகுதியை உற்பத்தி செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
ஜிஎஸ்கே என்ற மிகப்பெரிய மருந்து நிறுவனம் உருவாக்கி உள்ள இந்த தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது.
மலேரியாவுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசி இதுவாகும். இதன் உற்பத்தியை தொடங்கவும் பொதுப்பயன்பாட்டுக்கு என சந்தைப்படுத்தவும் சுமார் இரண்டு மாதமாகும் என கூறப்படுகிறது.
மலேரியாவுக்கு எதிரான தடுப்பூசி தொடர்பாக ஜிஎஸ்கே நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக பயோடெக் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது.
அதன்படி, ஜிஎஸ்கே நிறுவனமானது, மலேரியா தடுப்பூசிக்கான தொழில்நுட்பம், அனைத்து உரிமங்களையும் பாரத் பயோடெக் நிறுவனத்துடன் பகிர்ந்துகொள்ளும். ஆப்பிரிக்கா உள்ளிட்ட உலகின் குறிப்பிட்ட பகுதிகளில் மலேரியா தடுப்பூசியைப் பரவலாகப் பயன்படுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
முதற்கட்டமாக கானா, கென்யா உள்ளிட்ட பகுதிகளில் பயன்படுத்துவதற்கு என சுமார் பத்து மில்லியன் மலேரியா தடுப்பூசிகள் வழங்க ஜிஎஸ்கே நிறுவனம் முன்வந்துள்ளது.
உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் பட்சத்தில், ஆண்டுதோறும் சுமார் 15 மில்லியன் தடுப்பூசிகளை, எதிர்வரும் 2018ஆம் ஆண்டு வரை நன்கொடையாக அளிக்கவும் தயார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான குழந்தைகள் பலன் அடைவார்கள் என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.