புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அரசு ஊழியர்கள் அலுவலகம் வரக்கூடாது என டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 15ம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோர் அதற்கு மறுநாளில் இருந்து (அக்டோபர் 16ம் தேதி முதல்) அலுவலகம் வர தடை விதிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனரா என்பதை அதற்குரிய சான்றிதழ்கள் அல்லது ஆரோக்ய சேது செயலி மூலம் சரிபார்க்கப்பட்ட பிறகே அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படுவர் என்றும் அந்த ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
டெல்லி மாநில அரசின் தலைமைச் செயலாளர் விஜய் தேவ் வெளியிட்ட அறிக்கையில், தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வரை சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு அலுவலகத்தில் நுழைய அனுமதி இல்லை என்றும் அதுவரை அவர்கள் விடுப்பில் இருப்பதாகக் கருதப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து துறை தலைவர்களும் தங்களுக்குக் கீழ் பணியாற்றுவோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்களா என ஆரோக்ய சேது செயலி அல்லது தடுப்பூசி சான்றிதழ் மூலம் சரிபார்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசும் டெல்லியில் பணியாற்றும் தனது ஊழியர்களுக்கு இதுபோன்ற வழிகாட்டுதலை வழங்குவதன் மூலம் தொற்றுப்பரவல் பாதிப்பைக் குறைக்க இயலும் என்றும் விஜய் தேவ் கூறியுள்ளார்.
இதற்கிடையே சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு நாட்டில் அன்றாடம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 206 நாள்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் நாடு முழுவதும் புதிதாக 19,740 பேருக்கு கிருமி தொற்றியது உறுதியானது. இப்போது 236,643 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

