செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
5f920c32-c7e4-43f5-ad02-b770e7566323
-

மனைவி கொலை: கணவர்

குற்றவாளி எனத் தீர்ப்பு

கொல்லம்: கேரளாவை உலுக்கிய உத்ரா கொலை வழக்கில் அவரது கணவர் சூரஜ் குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மனைவி உத்ராவின் சொத்துகளை அபகரிப்பதற்காக கொல்லத்தில் 2020 மே 7ஆம் தேதி கருநாகத்தைக் கடிக்கவிட்டு உத்ராவைக் கொலை செய்ததாக சூரஜ் மீது வழக்குத் தொடரப்பட்டது.

33.9 மி. மக்களுக்குத் தொற்று

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 33.9 மில்லியன் (3.39 கோடி) என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 18,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாகவும் 193 பேர் மாண்டதாகவும் நேற்று அரசாங்க தகவல்கள் தெரிவித்தன. 21,563 பேர் குணமடைந்தனர். மொத்த மரண எண்ணிக்கை 450,782 ஆக உயர்ந்துள்ளது.

காஷ்மீர்: ஐந்து படைவீரர்கள்

மரணம்; 700 பேர் கைது

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தும் எதிர்ப்பு முன்னணி பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினர் 16 இடங்களில் திடீர் சோதனை நடத்தி 700 பேரை கைது செய்தனர்.

இதனிடையே, தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப் படுவோர், ஓர் அதிகாரி உட்பட ஐந்து படைவீரர்களைச் சுட்டுக்கொன்றுவிட்டதாகவும் கடந்த பிப்ரவரி மாதத்துக்கு பிறகு இதுவே படுமோசமான சம்பவமாக இருக்கிறது என்றும் ராணுவப் பேச்சாளர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.

எச்சில் கறையைப் போக்க ஆண்டுக்கு ரூ.1,200 கோடி

புதுடெல்லி: இந்தியாவில் ரயில் நிலையங்களில், குறிப்பாக வடமாநில ரயில் நிலையங்களில் மக்கள் கண்டபடி துப்பி வைக்கும் புகையிலை மற்றும் வெற்றிலை எச்சில் கறையை அகற்ற ரயில்வே நிர்வாகம் ஆண்டுக்கு 1,200 கோடி ரூபாய் செலவு செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தவிர, பல கோடி லிட்டர் தண்ணீரும் தேவைப்படு வதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினையைப் போக்க பிரத்தியேக காகிதப் பை ஒன்றை ரயில் நிலையங்களில் விற்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யன் கான் மனு ஒத்திவைப்பு

மும்பை: மும்பை போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோரின் பிணை மனு விசாரணையை மும்பை சிறப்பு நீதிமன்றம் நேற்று ஒத்திவைத்து உத்தரவிட்டது.