பெங்களூரு: கடந்த மூன்று தினங்களாக பெங்களூரில் கனமழை நீடித்து வரும் நிலையில், அங்குள்ள அனைத்துலக விமான நிலைய பகுதியில் மழை நீர் வெள்ளம்போல் தேங்கி உள்ளது.
இதனால் விமான நிலையத்துக்குள் செல்ல முடியாமல் பயணிகள் தவிப்புக்கு ஆளாகினர். குறித்த நேரத்துக்குள் செல்ல முடியாமல் பலர் விமானத்தைத் தவறவிட்டனர்.
பல பயணிகள் விமான நிலையத்துக்கு வெளியே நின்றிருந்த டிராக்டர் வாகனங்களில் தங்கள் உடைமைகளுடன் ஏறி உள்ளே சென்றனர்.
அதேபோல், விமான நிலையத்தில் இருந்த கார்களும் வெளியே செல்ல முடியவில்லை. பல வாகனங்களில் தண்ணீர் புகுந்ததால் அவை சிறிது தூரம் சென்றதும் நின்றுபோயின.
பெங்களூரில் இருந்து விமானங்கள் கிளம்புவதில் தாமதம் ஏற்பட்டது. சில விமானங்கள் தரையிறங்கவும் அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, டெல்லியில் கழிவுநீர் அமைப்பு பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் நடப்பு பருவமழைக் காலத்தில் அங்குள்ள முக்கியப் பகுதிகளில் மழை நீர் வடியாமல் தேங்கி உள்ளது. இதனால் போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது.

