செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
4755999e-fa18-4f43-b915-98832305317d
-

சோனியா காந்தியின் அழைப்பை நிராகரித்தார் சித்தராமையா

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் கட்சியில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே நீடித்து வரும் பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், சித்தராமையாவுக்கு தேசிய அளவில் பதவியளிக்க முன்வந்துள்ளார் சோனியா காந்தி. மாநில அரசியலை விட்டு தேசிய அரசியலுக்கு வந்து காங்கிரசை வலுவாக்க வேண்டும் என அவருக்கு சோனியா அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு அவர் தேசிய அரசியலுக்கு வந்தால், தேசிய பொதுச் செயலாளர் பதவி இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் பதவி வழங்குவதாகவும் சோனியா காந்தி கூறியதாகச் சொல்லப்படுகிறது. இந்த அழைப்பை அதே இடத்தில் சித்தராமையா நிராகரித்து விட்டதாகவும், தனக்கு கர்நாடக அரசியல் போதும் என்று கூறிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக சட்டசபைத் தேர்தல் வருகிற 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் நடைபெற உள்ளது. அப்போது காங்கிரஸ் சார்பில் தொகுதிகளை இறுதி செய்வதில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் அணிகளுக்கு இடையே மோதல் போக்கு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

எடியூரப்பா ஆதரவாளர்களிடம்

ரூ. 487 கோடி கள்ளப்பணம் சிக்கியது

பெங்களூரு: பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான எடியூரப்பா ஆதரவாளர்கள் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை அண்மையில் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத 487 கோடி ரூபாய் சிக்கியதாக தெரியவந்துள்ளது.

கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மூத்த மகனும், எம்.பி.,யுமான ராகவேந்திரா ஆகியோரின் அந்தரங்க உதவியாளராக இருந்த உமேஷ், அவரது மற்றொரு மகன் விஜயேந்திராவின் நெருங்கிய நண்பர் அரவிந்த் ஆகியோருக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அண்மையில் சோதனை நடத்தினர். அப்போது சிக்கிய ரூ.382 கோடி கணக்கில் காட்டப்படாத கள்ளப்பணம் என்றும் ஒரு நிறுவனமும், 105 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படவில்லை என மற்றொரு நிறுவனமும் ஒப்புக்கொண்டுள்ளன. இது தவிர, சோதனை நடந்த பிற இடங்களில், கணக்கில் காட்டப்படாத, 750 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்காக மகாராஷ்டிராவில் கடை அடைப்புப் போராட்டம்

மும்பை: மும்பை தவிர தானே, நவிமும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டன. வசாயில் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கைதுசெய்யப்பட்டனர்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீதான தாக்குதலைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் ஆளுங்கட்சியினர் நடத்திய இந்த போராட்டத்தால் மாநிலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3ஆம் தேதி மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, மாநிலத் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோருக்கு எதிராக விவசாயிகள் கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது விவசாயிகள் மீது பாஜகவினர் காரை மோதினர். இதில் 2 விவசாயிகள் உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு ஏற்பட்ட வன்முறையில் மேலும் 2 விவசாயிகள் உள்பட 6 பேர் பலியானார்கள்.

பெங்களூரில் கனமழை: ராணுவ பயிற்சி நிலையத்தின் சுவர் இடிந்து விழுந்தது

பெங்களூர்: பெங்களூருவில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரில் உள்ள பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. மேலும் பழமையான வீடுகள், சுவர்களும் இடிந்து விழுந்தன.

இந்திராநகரில் உள்ள ராணுவப் பயிற்சி நிலையத்தின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் 10 வாகனங்கள் சேதம் அடைந்தன. மேலும் மெஜஸ்டிக் செல்லும் வழியில் உள்ள ரயில்வே மேம்பாலச் சுவரும் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.