ஏழு பாதுகாப்பு நிறுவனங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு
புதுடெல்லி: இந்தியாவின் ராணுவத் தளவாட தயாரிப்பில் சுயசார்பை மேம்படுத்தும் வகையில் 41 ஆயுத தொழிற்சாலைகள், அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் பாதுகாப்பு நிறுவனங்களாக மாற்றப்பட்டு உள்ளன.
அந்த ஏழு பாதுகாப்பு நிறுவனங்களை பிரதமர் மோடி நேற்று காணொளி வழியாக தொடங்கி வைத்து உரையாற்றினார்.
"சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் பல பெரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படு கின்றன. மேலும் இது முன்பு இருந்ததைவிட அதிக வெளிப் படைத்தன்மையையும் நம்பிக்கையையும் கொண்டிருக்கும்," என்று திரு மோடி கூறினார்.
"சுதந்திரத்திற்குப் பின்னர் ராணுவத் தளவாட தொழிற்சாலைகளை நவீனப்படுத்த வேண்டும் என்ற தேவை இருந்தாலும் அதில் கவனம் செலுத்தப்படவில்லை," என்றார்.
"'சுயசார்பு இந்தியா' கொள்கையின் கீழ் இந்தியாவை தனது சொந்தப் பலத்தில் உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக மாற்று வதையும் நவீன ராணுவ தொழிற்சாலைகளை உருவாக்கி மேம்படுத் துவதும் நாட்டின் குறிக்கோளாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
"கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தத் தீர்மானத்தையும் 'மேக் இன் இந்தியா' என்ற தாரக மந்திரத்தையும் நோக்கி தேசம் சென்றுள்ளது.
"புதிய எதிர்காலத்திற்காக இந்தியா உறுதிபூண்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும்போது நீண்டகாலமாக கிடப்பில் இருந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுவிடும்," என்று மேலும் அவர் சொன்னார்.
ஏழு பாதுகாப்பு நிறுவனங்களும் தங்கள் பணி காலத்தில் 'ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கு' முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர் மோடி, எதிர்கால தொழில்நுட்பத்தில் நீங்கள் முன்னிலை வகிக்க வேண்டும், ஆய்வாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று வலி யுறுத்தினார்.

