செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
fe12cd3a-8737-4be7-bfe7-c0ab20bf2900
-

எல்லைகள் திறப்பு; தடுப்பூசி

ஏற்றுமதி தொடங்கியது

புதுடெல்லி: இந்தியா 19 மாதங்களுக்குப் பிறகு நேற்று முதல் வெளிநாட்டுப் பயணிகளுக்கு எல்லைகளைத் திறந்தது. இதனால் சுற்றுலா துறை மீட்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சிறப்பு விமானச் சேவைகளில் வருபவர்கள் மட்டும் தற்போது அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வெளிநாட்டுப் பயணிகளுக்கு சுற்றுலா விசா வழங்கப்படும் என்று இந்தியா அறிவித்திருந்தது. இதற்கிைடயே தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா தொடங்கியுள்ளது. நேப்பாளம், மியன்மார், ஈரான், பங்ளாதேஷ் ஆகிய நான்கு நாடுகளுக்கு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டதாக இந்திய அரசின் தகவல்களை சுட்டிக்காட்டி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வாகனச் சான்றிதழ்களை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு

புதுடெல்லி: கிருமிப் பரவல் காரணமாக வாகன ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை புதுப்பிக்க அளிக்கப்பட்டுள்ள அவகாசம் வரும் 31ஆம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கப் படாது என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. வாகன ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழ் உள்ளிட்டவற்றை புதுப்பிக்க தொற்று பரவிய காலத்தில் ஏழு முறை அவகாசம் நீட்டிக்கப் பட்டது. கடந்த 2020 மார்ச்சில் இருந்து அளிக்கப்பட்ட அவகாசம் கடந்த மாதம் ஏழாவது முறையாக நீட்டிக்கப் பட்டது. அதன்படி வரும் 31ஆம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும்.

100 கோடி முறை தடுப்பூசி

புதுடெல்லி: கிருமித்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடப்படும் எண்ணிக்கை அடுத்த வாரத்தில் நூறு கோடியை எட்டி சாதனை இந்தியா படைக்கவுள்ளது. இதைச் சிறப்பாக கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. "அடுத்த வாரத்தில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டு இந்தியா சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சாதனை குறித்து விமானங்கள், ரயில்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் அறிவிப்பு செய்யப்படும்," என்று மத்திய சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நூறு கோடி முறை தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் நாளில் நாடு முழுதும் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.