புதுடெல்லி: உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியாவுக்கு மேலும் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனைச் சுட்டிக்காட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒரு வரான கபில் சிபல், பிரதமர் மோடியைக் கிண்டல் செய்து கருத்து வெளியிட்டுள்ளார்.
ஊட்டச்சத்து குறைபாடு, ஐந்து வயதுக்குக் கீழ் உள்ள குழந்தை களின் எடைக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருத்தல், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புகள் உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாக வைத்து உலக பட்டினிக் குறியீடு மதிப்பிடப்படுகிறது.
அந்த வகையில் 2021ஆம் ஆண்டு உலக பட்டினிக் குறியீட்டில் 116 நாடுகள் இடம்பெற்றுள்ளன. அதில் இந்தியா 101வது இடத்துக்குச் சரிந்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு 107 நாடுகளுக்கான பட்டியலில் 94வது இடத்தில் இருந்த இந்தியா, 2021ஆம் ஆண்டில் 116 நாடுகளுக்கான பட்டியலில் 101வது இடத்துக்கு இறங்கியது.
உலக பட்டினிக் குறியீட்டிலும் இந்தியாவின் அண்டை நாடுகளான நேப்பாளம் 76வது இடத்திலும் பங்காளதேஷ் 76வது இடத்திலும் மியன்மார் 71வது இடத்திலும் பாகிஸ்தான் 92வது இடத்திலும் இடம்பெற்றுள்ளன.
சீனா, பிரேசில், குவைத் உள்ளிட்ட நாடுகள் உச்ச வரிசையில் இடம் பிடித்துள்ளன.
இந்த அறிக்கை குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி.யும் மூத்த தலைவருமான கபில் சிபல், பிரதமர் மோடியை கிண்டல் செய்துள்ளார்.
அதில் "இவை எல்லாவற்றையும் அழித்ததற்காக மோடிஜிக்கு வாழ்த்துகள் என்று அவர் கூறியுள்ளார்.
"வறுமை, பட்டினி, இந்தியாவை சூப்பர் சக்திவாய்ந்த நாடாக்கியது, நாட்டை டிஜிட்டல் பொருளாதாரமாக்கியது, இதைவிட இன்னும் அதிகமாக....உலக பட்டினிக் குறியீடு என்று கபிலி சிபில் விமர்சித்து உள்ளார்.
"2020ல் இந்தியாவுக்கு 94வது இடம், 2021ல் இந்தியாவுக்கு 101வது இடம்.
"பங்ளாதேஷ், பாகிஸ்தான், நேப்பாளத்தைவிட இந்தியா பின் தங்கியுள்ளது," என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

