ஸ்ரீநகர்: காஷ்மீரில் உள்ள பூஞ்ச்-ராஜோரி வனப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து ராணுவத்தினர் அங்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ அதிகாரி, வீரர் என ராணுவத் தரப்பில் இருவர் வீரமரணம் அடைந்தனர்.
இதே பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பயங்கரவாதி களின் தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
அப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதால் ஜம்மு பூஞ்ச்-ராஜோரி நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
கடந்த 10ஆம் தேதி பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்திய அதே பயங்கரவாதிகள் தற்போதும் தாக்குதல் நடத்தியிருப்பதாக ராணுவ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

