காஸியாபாத்: அடுக்குமாடிக் குடியிருப்பின் 25வது மாடியில் உள்ள தங்களது வீட்டின் மாடிமுகப்பில் இருந்து 14 வயதுச் சகோதரர்கள் இருவர் கீழே விழுந்து மாண்ட சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், காஸியாபாத் நகரில் நிகழ்ந்தது.
சத்யநாராயண், சூர்யநாராயண் என்ற அவ்விருவரும் இரட்டைச் சகோதரர்கள் எனக் கூறப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறை தெரிவித்தது. அவர்கள் இருவரும் ஒன்பதாம் வகுப்பில் படித்து வந்தனர்.
சம்பவம் நிகழ்ந்தபோது அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இருவர் வீட்டில் இருந்ததாகக் கூறப்பட்டது. அவர்களின் தந்தை வெளியூர் சென்றிருந்தார்.
உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
இதன்தொடர்பில் இதுவரை எந்தப் புகாரும் அளிக்கப்படாததால், இதனை ஒரு விபத்தாகக் கருதி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஆயினும், உடற்கூராய்வு அறிக்கைக்காக அவர்கள் காத்திருக்கின்றனர் என்றும் அதன்பின் அவர்களது மரணத்தில் ஏதேனும் மர்மம் உள்ளதா என விசாரணையைத் தொடங்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

