ஸ்ரீநகர்: இந்தியா வசம் உள்ள காஷ்மீரில் சனிக்கிழமையன்றுகலகக்காரர்களுக்கும் அரசாங்கத் துருப்புகளுக்கும் இடையில் நிகழ்ந்த மோதலில் மேலும் ஆறு பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அங்கு வன்செயல் அதிகரித்து வருவதாக அவர்கள் கூறினர். கடந்த இரண்டு வாரங்களில் குறைந்தபட்சம் 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மாண்டவர்களில் ஒன்பது பேர் பொதுமக்கள்.
சனிக்கிழமையன்று பயங்கரவாதிகள் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக ஸ்ரீநகர் போலிஸ் அதிகாரி விஜய் குமார் தெரிவித்தார். அதற்குப் பிறகு வெளிமாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரையும் வியாபாரி ஒருவரையும் பயங்கரவாதிகள் கொன்றதாக ராணுவப் பேச்சாளர் கூறினார். சாலைகளில் நிகழ்ந்த கைகலப்புகளில் இருவர் மாண்டனர்.
காஷ்மீரில் குடிமக்கள் கொல்லப்படுவதன் தொடர்பில் நடக்கும் புலன்விசாரணையை ஒட்டி 1,000க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைதாகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, காஷ்மீரைக் குறிவைத்து பாகிஸ்தானில் புதிய பயங்கரவாத இயக்கம் தலை எடுத்து இருப்பதாக இந்திய உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. காஷ்மீரில் உள்ள அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள், அரசுக்கு உதவியாக இருக்கும் செய்தித் துறையினர், காஷ்மீரி அல்லாதோர் ஆகியோரை இலக்காகக் கொண்டு அந்தப் பயங்கரவாத இயக்கத்தினர் களம் இறங்கஉள்ளதாக உளவுத் துறை விழிப்பூட்டி இருக்கிறது என்று ஊடகத் தகவல்கள் கூறின. காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதற்காக 200 இடங்களை அந்தப் பயங்கரவாத அமைப்பு தேர்வு செய்துள்ளதாகவும் இந்திய உளவுத் துறை அமைப்புகள் தெரிவித்து உள்ளன.

