கேரளாவில் கடும் மழை, நிலச்சரிவு; 22 பேர் உயிரிழப்பு

கேரளாவில் கடும் மழை, நிலச்சரிவு; 22 பேர் உயிரிழப்பு

2 mins read
10d9b9a2-6202-4e62-8859-5498f897307f
கேரளாவின் தொடுபுழா என்ற ஊரில் பெய்த கடும் மழையில் இடிந்து விழுந்த தனது வீட்டின் இடிபாடுகளுக்கு இடையில் செய்வதறியாது தன் வளர்ப்பு நாயுடன் கவலையில் ஆழ்ந்து இருக்கிறார் இந்த மனிதர். படம்: ஏஎஃப்பி -
multi-img1 of 2
Google News Preferred Icon

திருவனந்தபுரம்: இந்தியாவின் கேரள மாநிலத்தில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருவதால் பல இடங்களிலும் நிலச்சரிவுகள் ஏற்பட்டும் வீடுகள் இடிந்தும் 22 பேர் மாண்டுவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கோட்டயத்தில் 13 பேர், இடுக்கியில் எட்டுப் பேர், கோழிக்கோட்டில் ஒருவர் மாண்டுவிட்டனர். கோட்டக்கல்லில் வீடு இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் புதைந்தனர். அவர்களில் ஐவரின் உடல்கள் மீட்கப்பட்டுவிட்டதாக நேற்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐந்து பிள்ளைகள் உட்பட 13 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி பெண்கள் எண்மர், சிறார் எழுவர் உட்பட 33 பேர் காப்பற்றப்பட்டனர். பிறந்து 22 நாள்களே ஆன குழந்தையும் மீட்கப்பட்டது. முதல்வர் பினராயி விஜயன் உயர்நிலைக் கூட்டத்தை நடத்தி, மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டார்.

மாநில அரசாங்கம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவை மீட்புப் பணியில் உதவி வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 11 குழுக்களும் மீட்புப் பணியில் சேர்ந்துள்ளன.

இதனிடையே, கேரளாவில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளதால் பல மாவட்டங்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வேளையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கேரளாவுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் ஆதரவையும் மத்திய அரசாங்கம் வழங்கும் என்று உறுதியளித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கேரள முதல்வர் பினராயி விஜயனைத் தொடர்புகொண்டு, நிலைமையைக் கேட்டறிந்தார்.