பெங்களூரு: பெங்களூருவில் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் குடியேறி மூன்று ஆண்டுகளே ஆன அடுக்குமாடி கட்டடம் ஒன்று சிறிது சிறிதாக சாயத் தொடங்கியதையடுத்து அதில் குடியிருந்த 32 குடும்பத்தினரும் வெளியேற்றப்பட்டனர்.
அந்த ஏழுமாடி கட்டடத்தின் அடித்தளத்தில் பிளவுகள் ஏற்பட்டு கட்டடம் சாயத் தொடங்கியது.
பின்னி மில்ஸ் ஆலை அருகே போலிசார் குடியிருப்பில் அந்த அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டன. அங்கு குடியிருந்தவர்கள் வேறு ஒரு போலிஸ் குடியிருப்பு பகுதிக்கு இடம் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். பெங்களூருவில் கடந்த 3 வார காலத்தில் நகர் பகுதிகளில் மூன்று கட்டடங்கள் இடிந்துவிழுந்து விட்டன. ஒரு பக்கமாகச் சாய்ந்ததையடுத்து ஒரு கட்டடம் இடிக்கப்பட்டது. கடும் மழை இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
நகரில் மக்களின் பாதுகாப்பை கருதி 300க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றன என்று அடையாளம் காணப்பட்டு உள்ளது.

