செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
494257ac-eb3d-4779-8364-3ea6e4ae1da9
-
Google News Preferred Icon

31 இணை அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி: இந்திய அமைச்சரவையில் உள்ள 31 இணை அமைச்சர்கள் அனைவரையும் பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொருவராக தனியாக பார்த்துப் பேசினார்.

இந்தியாவில் இருக்கும் 700க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 300 மாவட்டங்களுக்காவது சென்று அங்குள்ள பிரச்சினைகளை அலசி ஆராயும்படி இணை அமைச்சர்களுக்கு பிரதமர் உத்தரவிட்டார். இதனையொட்டி வட மாநிலங்களைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் விரைவில் தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் கூறின.

அமைச்சர் இஸ்ரேல் பயணம்

புதுடெல்லி: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று நாள் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன. இஸ்ரேலியத் தலைவர்களுடன் அவர் பேச்சு நடத்துவார் என்றும் இந்தப் பயணத்தின் மூலம் இரு நாட்டு உறவு பலமடையும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

கொரோனா தொற்று, உள்நாட்டுப் பணிகள் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டுப் பயணத்தை நிறுத்தி வைத்துள்ளார். ஆகையால் பிற நாடுகளுடன் நல்லுறவை மேற்கொள்ளும் பணி வெளியுறவு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

ஒரு கோப்பை டீ ரூ.1,000

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் மிகவும் பிரபலமான நீலோஃபர் டீக்கடை, பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் அண்மையில் ஒரு கிளையைத் திறந்தது. இங்கு ஒரு கோப்பை டீ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 'கோல்டன் டிப்ஸ் பிளாக் டீ' என்ற மிக விலை உயர்ந்த அசாம் தேயிலைத் தூளை கிலோ ரூ.75,000 விலைக்கு ஏலம் எடுத்து அதைத் தாங்கள் பயன்படுத்துவதாகவும் விற்பனை நன்றாக நடக்கிறது என்றும் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

அமித் ஷா: நேதாஜி, பட்டேலுக்கு உரிய மரியாதை இல்லை

போர்ட்பிளேர்: அந்தமானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, அங்கு பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

கடந்த கால இந்திய அரசாங்கத்தில் நேதாஜி, சர்தார் வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்களுக்கு உயரிய மரியாதை கிடைக்கவில்லை என்று அங்கு ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது அவர் கவலை தெரிவித்தார்.

புகழ்பெற்ற சில விடுதலைப் போராட்ட வீரர்களையும் அவர்களது பங்களிப்பையும் வேண்டுமென்றே சிறுமைப்படுத்தும் முயற்சிகள் நடந்ததாகவும் அவர் கூறினார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக அரசு, குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலையை நிறுவியதுடன் நேதாஜியின் பிறந்த தினத்தை 'வெற்றி நாளாக'வும் அறிவித்தது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

அயோத்தி தசரதன் புதல்வர் ராமனுக்கு ரூ.500 அபராதம்

திருவனந்தபுரம்: கேரளாவில் போலிசார் வாகன சோதனையின்போது ஆடவர் ஒருவர் நம்பவே முடியாத வகையில் பெயரையும் முகவரியையும் கொடுத்து போலிசை ஏமாற்றிவிட்டார். கொல்லம் அருகே உள்ள சடையமங்கலம் என்ற ஊரில் இருக்கை வார் அணியாமல் காரை ஓட்டி வந்த ஒருவருக்கு போலிஸ் அதிகாரி ரூ.500 அபராதம் விதித்து அவருடைய விவரங்களைக் கேட்டார்.

தன் பெயர் ராமன் என்றும் தந்தை பெயர் தசரதன் என்றும் சொந்த ஊர் அயோத்தி என்றும் அந்த ஆடவர் தயங்காமல், சிரிக்காமல் சொல்ல, சந்தேகப்படாமல் அதை அதிகாரி குறித்துக்கொண்டார்.

இந்நிலையில், அந்தச் சம்பவத்தை அப்படியே காணொளி எடுத்த வேறு ஒருவர் அதை இணையத்தில் பதிவேற்றினார். அந்தக் காணொளி பரபரப்பாகி இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன.