வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்க பாத்திரமே படகானது

வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்க பாத்திரமே படகானது

1 mins read
498b756a-3415-4cc7-ae1a-2d4868cf2b0f
படகு கிடைக்காததால் பாத்திரத்தில் ஏறி வெள்ளத்தைக் கடக்கும் ஆகாஷ்-ஐஸ்வர்யா இணையர். படம்: இந்திய ஊடகம் -
multi-img1 of 2

ஆலப்புழா: கடந்த மூன்று நாள்களாக இந்தியாவின் கேரள மாநிலத்தைக் கனமழையும் வெள்ளமும் புரட்டிப்போட்டுவரும் நிலையில், ஒரு புதுமையான நிகழ்வும் அரங்கேறியுள்ளது.

சுகாதாரப் பணியாளர்களான ஆகாஷ் குஞ்சுமோனுக்கும் ஐஸ்வர்யாவிற்கும் இன்று திங்கட்கிழமை குட்டநாடு, தாளவாடியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அக்கோவில் வெள்ளத்தால் சூழப்பட்டிருந்தது.

இருப்பினும், நல்ல நாளை விட்டுவிட அவர்களுக்கு மனமில்லை. இதனையடுத்து, கோவிலின் அருகிலேயே அமைந்துள்ள ஒரு மண்டபத்தில் திருமணத்தை நடத்துவது என முடிவுசெய்யப்பட்டது.

சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் ஒரு பெரிய, அகன்ற அலுமினியப் பாத்திரத்தில் ஏறி, மணமக்கள் மண்டபத்தை அடைந்தனர்.

"தாளவாடியில் உள்ள பனயனூர்க்காவு தேவி கோவிலில் திருமணம் நடக்கவிருந்தது. கோவிலை நீர் சூழ்ந்ததால், அருகிலுள்ள மண்டபத்தில் திருமணத்தை நடத்துவது என முடிவுசெய்தோம். அங்கும் வெள்ளம் புகுந்திருந்தபோதும் மேடை மூழ்கவில்லை.

"இதனையடுத்து, ஒரு சிறிய படகை ஏற்பாடு செய்து, மண்டபத்திற்குச் செல்லலாம் என்று முடிவுசெய்தோம். ஆனால், படகு கிடைக்கவில்லை. அதனால், பாத்திரத்தில் ஏறி மண்டபத்தை வந்தடைந்தோம். திட்டமிட்டபடி நல்ல நேரத்தில் திருமணம் நடந்தேறியதால் மகிழ்ச்சியடைந்தோம்," என்றார் திரு குஞ்சுமோன்.

திருமண நிகழ்வில் ஒரு சில உறவினர்களே பங்கேற்க முடிந்தது.