காஷ்மீரில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது நீடிக்கும் தாக்குதல்: 11 பேர் பலி
ஸ்ரீநகர்: காஷ்மீர், அசாம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உளவுப் பிரிவும் அல்கய்தா பயங்கரவாத அமைப்பும் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து, அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பலப்படுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருப்பதாகத் தெரிகிறது.
அசாமில் கடந்த மாதம் நிகழ்ந்த வன்முறையின்போது பொதுமக்களில் இருவர் உயிரிழந்தனர். அவர்கள் இருவரும் இஸ்லாமியர்கள் ஆவர். இதுபோன்று பல்வேறு சம்பவங்கள் நிகழ்வதாகவும் அவற்றுக்குப் பழிவாங்கும் வகையில் பயங்கரவாத அமைப்புகள் இந்திய மாநிலங்களைக் குறிவைத்திருப்பதாகவும் மத்திய அரசுக்கு தெரிய வந்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சிலருக்கு மிரட்டல் இருப்பதாகவும் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்த சில அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, காஷ்மீரில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
நேற்று முன்தினம் அங்கு நிகழ்ந்த இரு வெவ்வேறு சம்பவங்களில் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் இருவர் கொலை செய்யப்பட்டனர்.
இதன் மூலம் அண்மைய சில தினங்களில் உயிரிழந்த வெளிமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 11ஆக கூடியுள்ளது.
இவர்களில் ஐந்து பேர் பீகாரைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
கடந்த 24 மணி நேரத்தில் ஸ்ரீநகரில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அண்மைய சில வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் 13 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக காஷ்மீர் ஐஜி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
அங்கு தேடுதல் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையும் அதிகரித்துள்ளது.
காஷ்மீரில் நிலவும் அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க சில தரப்பினர் முயற்சி செய்வதாக அம்மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, எல்லையில் குவிக்கப்பட்டுள்ள துருப்புகளை திரும்பப் பெறுவது தொடர்பாக இந்தியா, சீனா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இருதரப்புக்கும் இடையே 13 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.
எனினும், எல்லையில் நிலவும் பதற்றம் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை.

