செய்திக்கொத்து

2 mins read
9aa101f4-ad97-475d-a9c5-e75bafce6498
-

ஒரே நாளில் 4.1 மில்லியன் தடுப்பூசி

புதுடெல்லி: நாடு முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 4.1 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாட்டில் இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 281 மில்லியனாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, சிறார்களுக்கும் தடுப்பூசி போடுவது குறித்து உடனடியாக முடிவெடுக்க இயலாது என கொரோனா பணிக்குழுவின் தலைவர் மருத்துவர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் வழக்கறிஞர் படுகொலை

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பூபேந்திர சிங் என்ற அந்த வழக்கறிஞர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மூன்றாவது தளத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடப்பதைப் பார்த்த சக வழக்கறிஞர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்து விசாரணை மேற்கொண்ட போலிசார், பூபேந்திர சிங் அருகே கிடந்த நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

இரவுச்சந்தையில் தின்பண்டங்கள் வாங்கி சாப்பிட்ட மூன்று சிறுமிகள் பலி

லக்னோ: இரவுச் சந்தையில் நொறுக்குத்தீனி வாங்கி சாப்பிட்ட சகோதரிகள் மூவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இச்சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு நான்கு முதல் எட்டு வயதுக்கு உட்பட்ட மூன்று சிறுமிகளும் இரவுச்சந்தைக்கு சென்றுள்ளனர். அங்கு விற்கப்பட்ட சில தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்ட ஓரிரு மணி நேரங்களில் மூவரும் வாந்தி எடுத்துள்ளனர். பின்னர் மயங்கிய நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். உடற்கூராய்வில் இறப்புக்கான காரணம் தெரிய வரவில்லை. சிறுமிகள் சாப்பிட்ட தின்பண்டங்களின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பெங்களூரில் பத்து மாதங்களில் 3,255 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

பெங்களூரு: கடந்த பத்து மாதங்களில் பெங்களூரில் ரூ.45 கோடி மதிப்பிலான போதைப்பொருள்களை பறிமுதல் செய்துள்ளதாக மாநகரக் காவல் ஆணையர் கமல்பந்த் கூறி உள்ளார். நடப்பாண்டு ஜனவரி முதல் கடந்த 7ஆம் தேதி வரை போதைப்பொருள் வழக்குகள் தொடர்பாக 4,210 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். இதுவரை 3,337 பேர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது. 3,255 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

கிரிக்கெட் போட்டி: அமைச்சர் கருத்து

புதுடெல்லி: எதிர்வரும் 24ஆம் தேதி டி20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான ஆட்டத்தை நடத்துவது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார். இரு நாடுகளுக்கு இடையேயான உறவு சீராக இல்லாத நிலையில், இவ்வாறு பரிசீலிப்பது அவசியம் என தாம் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.