மூன்றாவது அலைக்கான வாய்ப்புகள் குறைவு என நிபுணர்கள் கருத்து
புதுடெல்லி: கொரோனா தொற்றுப் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இந்தியாவின் 21 மாநிலங்களில் நேற்று முன்தினம் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை.
நேற்று முன்தினம் புதிதாக 13,058 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது கடந்த 231 நாள்களில் பதிவான ஆகக்குறைவான எண்ணிக்கை ஆகும். நேற்று முன்தினம் 164 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகிவிட்டனர். கேரளாவில் 60 பேரும் மகாராஷ்டிராவில் 27 பேரும் பலியான நிலையில், உத்தரப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.
புதிய பாதிப்பை விட கொரோனா பிடியில் இருந்து மீள்பவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 19,470 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் குறைந்து வருவதாகவும் மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா கிருமியின் புதிய திரிபுகள் நாட்டில் கண்டறியப்படவில்லை என்றும் அக்டோபர் மாதத்தின் முதல் 15 நாள்கள் வரை நடத்தப்பட்ட மரபணு வரிசைமுறை பரிசோதனையின்போது உருமாறிய கொரோனா கிருமி வகைகள் ஏதும் கண்டறியப்படவில்லை என்றும் நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
அனைவருக்கும் இரண்டு தடுப்பூசிகள் போடப்படும் வரை பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அனைவருக்கும் முழுமையான தடுப்பூசி போடப்படும் வரை பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அதற்கான ஒத்துழைப்பை அரசுக்கு பொதுமக்கள் தரவேண்டும் என்று கர்நாடக மாநில சுகாதாரத் துறை ஆணையர் டி.ரன்தீப் கூறியுள்ளார்.
கொரோனா கிருமியின் மரபணு வரிசைமுறை உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், அம்மாநிலத்தில் நாள்தோறும் பத்து விழுக்காடு நேர்மறை மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் உருமாறிய கொரோனா வகைகள் ஏதும் புதிதாக கண்டறியப்படவில்லை என்பது நல்ல தகவல் என்றும் இத்தகைய காரணங்களால் மூன்றாவது அலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு என்றும் அவர் கூறியுள்ளார்.
மாநில நிலவரம்:
அன்றாட தொற்றுப் பாதிப்பில் சரிபாதி கேரளாவின் பங்களிப்பாக உள்ளது. அம்மாநிலத்தில் நேற்று முன்தினம் 6,676 பேருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதியானது.
கர்நாடகாவில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து, அக்டோபர் 25ஆம் தேதி முதல் தொடக்கப்பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் நேற்று முன்தினம் 1,485 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 27 பேர் உயிரிழந்துவிட்டதை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 139,816ஆக உள்ளது.
இதற்கிடையே, உத்தரகாண்ட் மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது பெரும் சாதனை என பிரதமர் மோடி பாராட்டி உள்ளார். பெருந்தொற்றுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் இந்தியாவின் தடுப்பூசித் திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

