ஆறு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்: காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் பயங்கரவாதி களால் படுகொலை செய்யப்படுவது குறித்து விசாரிக்க மத்திய சிறப்பு புலனாய்வு படை அங்கு செல்கிறது. இதற்கிடையே அங்கு நேற்று முன்தினம் ஆறு பயங்கர வாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டனர். இந்நிலையில், தேசிய பாதுகாப்பு யுக்திகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நேற்று முன்தினம் ஆலோசனை நடைபெற்றது. அதில் காஷ்மீர் விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
லக்கிம்பூர் வன்முறை: உள்ளூர் பாஜக தலைவர் உட்பட நால்வர் கைது
லக்னோ: லக்கிம்பூர் வன்முறைச் சம்பவம் தொடர்பாக உள்ளூர் பாஜக தலைவர் உட்பட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
அமைச்சர்: இந்தியா வல்லரசாக மாறுவதில் காஷ்மீருக்குப் பங்குண்டு
புதுடெல்லி: உலகின் சக்திவாய்ந்த வல்லரசு நாடாக இந்தியாவை உருவாக்குவதில் காஷ்மீர் முக்கியப் பங்கு வகிக்கும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். துபாய் நிறுவனங்கள் பல காஷ்மீரிலும் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், துபாய் அரசுக்கு இடையே பல்வேறு திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அண்மையில் கையெழுத்தானது என்றும் ரியல் எஸ்டேட், தொழிற்பூங்காக்கள், மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை உள்ளிட்ட திட்டங்கள் சார்ந்து இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
கல்விக் கொள்கை சீராய்வுக் கூட்டம்: ஆர்எஸ்எஸ் அமைப்பு பங்கேற்பு
புதுடெல்லி: தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான சீராய்வுக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பும் பங்கேற்றது. டெல்லியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத் தில் ஆர்எஸ்எஸ் சார்பில், மூத்த நிர்வாகி சுரேஷ் சோனி பங்கேற்றார். ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்புகளும் பங்கேற்றதாக தெரிகிறது. 2020ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை, கடந்த ஆண்டு ஜூலை 29ஆம் தேதி அன்று ஒப்புதல் அளித்தது. இதுவே தற்போது நாடு முழுவதும் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.

