திறன்பேசி, ஸ்கூட்டி: இலவசங்களுக்கு இவரும் விதிவிலக்கல்ல!

திறன்பேசி, ஸ்கூட்டி: இலவசங்களுக்கு இவரும் விதிவிலக்கல்ல!

1 mins read
be980442-e60a-4737-99d5-c25e2ecc3d85
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ளவிருக்கிறது . படம்: ஏஎஃப்பி -
Google News Preferred Icon

லக்னோ: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று, ஆட்சியமைத்தால் மாணவிகளுக்குத் திறன்பேசியும் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனத்தையும் இலவசமாக வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "மாணவிகள் சிலரைச் சந்தித்தேன். படிப்பிற்காகவும் பாதுகாப்பிற்காகவும் தங்களுக்குத் திறன்பேசிகள் தேவைப்படுவதாக அவர்கள் கூறினர். அதனைத் தொடர்ந்து, தேர்தல் அறிக்கை குழுவுடன் ஆலோசனை செய்தேன். அவர்களும் ஒப்புக்கொண்டுவிட்டனர். நாங்கள் ஆட்சியமைத்தால் பள்ளி மாணவிகளுக்குத் திறன்பேசியும் கல்லூரி மாணவிகளுக்கு 'மின்ஸ்கூட்டி'யும் இலவசமாக வழங்குவோம்," என்று தெரிவித்துள்ளார்.

பெண்களின் வாக்குகளை அள்ள காங்கிரஸ் கட்சி கையிலெடுத்துள்ள முக்கிய உத்தியாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.

முன்னதாக, உ.பி. சட்டமன்றத் தேர்தலில் 40% இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று பிரியங்கா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியால் 1998 முதல் உ.பி.யில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. இந்நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரியங்கா தலைமையில் காங்கிரஸ் களமிறங்கவுள்ளது.