மாணவனை அடித்தே கொன்ற ஆசிரியர்

மாணவனை அடித்தே கொன்ற ஆசிரியர்

1 mins read
3b17c33d-c2f3-448b-9228-fb787332f117
கடந்த 15 நாள்களாகவே அந்த ஆசிரியர் காரணமின்றித் தன்னை அடிப்பதாக அச்சிறுவன் தன் தந்தையிடன் நான்கு, ஐந்து முறை கூறியுள்ளான். -

ஜெய்ப்பூர்: வீட்டுப்பாடம் செய்யாததற்காக ஏழாம் வகுப்பு மாணவனை அடித்துக் கொன்ற சந்தேகத்தின்பேரில் தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவரை இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலக் காவல்துறையினர் கைது செய்தனர்.

சுரு மாவட்டம், கோலாசர் என்ற சிற்றூரைச் சேர்ந்தவர் ஓம்பிரகாஷ். அவருடைய 13 வயது மகன், சாலாசரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பயின்று வந்தான்.

கடந்த 15 நாள்களாகவே அந்த ஆசிரியர் காரணமின்றித் தன்னை அடிப்பதாக அவன் தன் தந்தையிடம் நான்கு, ஐந்து முறை கூறியுள்ளான்.

இந்நிலையில், நேற்று புதன்கிழமை காலை 9.15 மணியளவில் மனோஜ் குமார் என்ற அந்த ஆசிரியர், திரு ஓம்பிரகாஷை அழைத்து, அவரின் மகன் சுயநினைவின்றி விழுந்து கிடப்பதாகத் தெரிவித்தார்.

வீட்டுப்பாடம் செய்யாததால் தான் அவனை அடித்ததாகவும் அதனைத் தொடர்ந்து அவன் விழுந்துவிட்டதாகவும் மனோஜ் குமார் சொன்னார்.

தன் மகனைக் கொன்றுவிட்டீர்களா என்று திரு ஓம்பிரகாஷ் கேட்டதற்கு, அவன் இறந்துகிடப்பதுபோல் நடிப்பதாக மனோஜ் குமார் கூறியதாகச் சொல்லப்பட்டது.

ஆனால், மனோஜ் குமார் கொஞ்சம்கூட இரக்கமின்றி தங்களது தோழனை அடித்ததாகச் சக மாணவர்கள் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, அம்மாணவன் அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். ஆனால், அவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறி, மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர்.

இதனையடுத்து, ஓம்பிரகாஷ் புகாரளிக்க, காவல்துறை மனோஜ் குமாரைக் கைதுசெய்து, வழக்குப்பதிவு செய்தது.