செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
4c67edfd-4c04-4eaf-9d6e-c03d512b62b7
-

சாலைகளை பயன்படுத்த மக்களுக்கும் உரிமையுண்டு: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: விவசாயிகளுக்கு போராட்டம் நடத்த உரிமை உள்ளது போல் பொதுமக்களுக்கும் சாலைகளில் செல்லும் உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோரிக்கைகளுக்காக விவசாயிகள் காலவரையறை இன்றி சாலைகளை மறிக்கக் கூடாது என்று ஒரு வழக்கு விசாரணையின்போது நீதிபதி கவுல் குறிப்பிட்டுள்ளார். எனவே, விவசாயிகள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபடக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

பாடகி சித்ராவுக்கு 'கோல்டன் விசா'

புதுடெல்லி: பின்னணிப் பாடகி சித்ராவுக்கு ஐக்கிய அமீரக சிற்றரசு 'கோல்டன் விசா' வழங்கி சிறப்பித்துள்ளது. ஏற்கெனவே நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய் தத், மோகன் லால், மம்முட்டி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்ளிட்ட இந்திய பிரபலங்களுக்கு 'கோல்டன் விசா' வழங்கப்பட்டுள்ளது. தற்போது பாடகி சித்ராவும் பெற்றுள்ளார். விசா வழங்கும் நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இந்த விசா இருப்பவர்கள் அமீரகத்தில் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் தொடர்ந்து வசிக்க முடியும். பின்னர் அதை புதுப்பித்துக் கொள்ளவும் இயலும்.

செயற்கை கருத்தரிப்பு மூலம் 70 வயதில் குழந்தை பெற்றெடுத்த மூதாட்டி

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வல்ஜிபாய் ரபாரி (75 வயது), ஜிவுன்பென் ரபாரி (70 வயது) தம்பதியருக்கு (படம்) செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பிறந்துள்ளது. திருமணமாகி 45 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் ஏங்கிய இருவரும் செயற்கை கருத்தரிப்பு மையத்தை அணுகி ஆலோசனை பெற்றனர். இந்நிலையில், ஆண் குழந்தை பெற்றெடுத்துள்ளார் ஜிவுன்பென் ரபாரி. அவருக்கு ஏராளமானோர் இணையம் வழி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வரும் 25ஆம் தேதி முதல் கேரளாவில் திரையரங்குகளைத் திறக்க அனுமதி

திருவனந்தபுரம்: கேரளாவில் தொற்றுப்பரவல் மீண்டும் கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ள நிலையில், வரும் 25ஆம் தேதி முதல் அங்குள்ள திரையரங்குகளைத் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. எனினும், தங்களது கோரிக்கைகள் சிலவற்றை நிறைவேற்றினால் மட்டுமே திரையரங்குகளைத் திறக்கப்போவதாக கேரள திரையரங்கு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகள் 30 ஆண்டுகளில் 15% அதிகரிப்பு

புதுடெல்லி: கடந்த முப்பது ஆண்டுகளில் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகள் இந்தியாவில் 15 விழுக்காடு அதிகரித் துள்ளதாக அண்மைய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் இந்தியா, பிரேசில் ஆகிய இரு நாடுகளிலும் வெப்பம் தொடர்பான உயிரிழப்புகள் அதிகரித்து இருந்ததாகவும் வெப்பம் காரணமாக ஏற்படும் பொருளாதார இழப்புகள் இந்தியா, பாகிஸ்தான், பங்ளாதேஷில் அதிகரித்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% அதிகரிப்பு

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியதாரர் களுக்குமான அகவிலைப்படியை மூன்று விழுக்காடு உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 31 விழுக்காடாக அதிகரிக்கும்.