பெங்களூரு: கிராமங்களிலும் அதிவேக இணைய இணைப்பு கிடைக்க வேண்டும் என மத்திய அரசு கூறி வரும் நிலையில், பெங்களூரு தனியார் நிறுவனம் ஒன்று, இணையப் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் நடமாடும் கைபேசி கோபுரங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளது.
இதற்காக ஆளில்லா சிறிய ரக வானூர்திகள் பயன்படுத்தப்பட உள்ளன. அவை சூரிய மின்னாற்றல், பேட்டரி மின்சாரத்தின் உதவியோடு இயக்கப்படும்.
அவற்றில் உள்ள ஹைபிரிட் இன்ஜினுடைய செயல்பாடு கைபேசி கோபுரங்களுக்கு இணையானதாக இருக்கும்.
மலைப்பகுதி, தொலைத்தொடர்பு வசதி இல்லாத பகுதிகளில் இந்த நவீன வானூர்திகளைப் பயன்படுத்தி இணையச் சேவையை அளிக்க இயலும் என்கிறது அத்தனியார் நிறுவனம்.
"சிறிய ரக வானூர்திகள் மூலம் கைபேசி கோபுரங்கள் போன்ற அமைப்பை ஏற்படுத்துவது எளிய பணிதான். மேலும் பேரிடர் காலங்களில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த இந்த ஏற்பாடு பயன்படும்.
"மேலும், வான்வெளி விளம்பரம், பொருள்களை விளம்பரப்படுத்துவது ஆகியவற்றுக்கும் இந்த நவீன தொழில்நுட்பம் உதவும்," என்கிறார் அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஷால் சவுரவ்.

