திருவனந்தபுரம்: மழை, நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 435 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
இந்த முகாம்களில் சுமார் 29 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 12ஆம் தேதி கேரளாவில் பெய்யத் தொடங்கிய மழை இன்னும் நீடித்து வருகிறது. பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, கிழக்கு மத்திய அரபிக்கடலில் நீர் சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கேரளாவில் வரும் 25ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் உள்பட பத்து மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு நிவாரணப் பணிக்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மழை, நிலச்சரிவு தொடர்பான சம்பவங்களில் பலியானோர் எண்ணக்கை 50ஆக அதிகரித்துள்ளது. மேலும், நான்கு பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

