திருவனந்தபுரம்: பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திய பெண் ஒருவர், தனக்குப் பிறந்த ஆறு பெண் குழந்தைகளையும் மருத்துவராக்கி, இச்செய்தியைக் கேட்பவர்களை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், நடபுரத்தில் பிறந்து வளர்ந்தவர் சாய்னா. ஐந்தாம் வகுப்பில் படித்து வந்தவர், தனது உறவினர் அகமது குஞ்சம்மை திருமணம் செய்து கொள்வதற்காக படிப்பை பாதியில் நிறுத்தினார். அப்போது அவரது வயது 12.
சென்னையில் வியாபாரம் செய்து வந்த அகமது, திருமணம் முடிந்ததும் கத்தார் நாட்டுக்குப் பணிபுரியச் சென்றார். அதன்பிறகு மனைவி சாய்னாவுடன் அங்கு குடியேறினார்.
சாய்னாவுக்குத் தொடர்ச்சியாக ஆறு மகள்கள் பிறந்தனர். மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க விரும்பிய தம்பதியர், தங்களது மகள்களுக்கு நல்ல கல்வியை வழங்க முடிவு செய்தனர்.
தம்பதிகளின் ஆறு மகள்களில் முதல் நான்கு மகள்களும் மருத்துவம் பயின்று மருத்துவத் துறையில் பணியாற்றி வருகின்றனர்.
ஐந்தாவது மகள் சென்னையில் எம்பிபிஎஸ் இறுதியாண்டும் கடைக்குட்டி மகள் மங்களூருவில் எம்பிபிஎஸ் முதலாமாண்டும் படித்து வருகின்றனர்.
அத்துடன், முதல் நான்கு மகள்களின் கணவர்களும் மருத்துவர்களாகவே அமைந்துள்ளனர்.
மகள்களின் கணவர்களும் ஒரே துறையில் இருந்தால் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முடியும், விட்டுக்கொடுத்துப் போவார்கள் என்பதால் மருத்துவம் படித்த மணமகன்களை தேர்வு செய்ததாகவும் கூறுகிறார்.
35 ஆண்டுகளுக்குப் பிறகு கத்தாரில் இருந்து தம்பதிகள் தங்களது மகள்களுடன் கேரளம் திரும் பிய நிலையில், இரு ஆண்டுகளுக்கு முன்னர் அகமது மாரடைப்பால் மரணமடைந்தார். கணவரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் கடைசி இரு மகள்களையும் மருத்துவம் பயில ஊக்குவித்து வருகிறார் சாய்னா.

