புதுடெல்லி: தீபாவளி பண்டிகையின்போது மக்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
அடுத்தடுத்த வாரங்களில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வர உள்ள நிலையில் மக்கள் உள்நாட்டுப் பொருட்களையே வாங்க வேண்டும் என்று 'மனதின் குரல்' என்ற பெயரி லான மாதாந்திர வானொலி உரையில் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
உள்நாட்டுப் பொருட்களை வாங்கினால் பிரகாசிப்பது பண்டிகைகள் மட்டுமல்ல, ஓர் ஏழை, ஒரு கைவினைக் கலைஞர், ஒரு நெசவாளியின் வீடும்தான் என்று பிரதமர் குறிப்பிட்டதாக 'புதிய தலைமுறை' தெரிவித்தது.
இந்தியப் பெண்கள் அனைத்து துறைகளிலும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வருவதாகவும் திரு மோடி தெரிவித்தார்.
துணை ராணுவம் உட்பட காவல் படைகளில் சேர்ந்துள்ள பெண் களின் எண்ணிக்கை கடந்த ஏழு ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
கொரோனா தடுப்பூசி திட்டத்தில் கிடத்த வெற்றி, சவால்களை எதிர்கொள்ளும் இந்தியாவின் திறனை வெளிக்காட்டியுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
வானூர்தி(டிரோன்) தொழில் நுட்பம் தற்போது கொரோனா தடுப்பூசி விநியோகத்திலும் பயன் படுத்தப்படுகிறது. குஜராத்தில் வயல்களில் உரம் தெளிக்கும் பணியில் வானூர்திகள் ஈடுபடுத்தப் படுகின்றன.
அனைத்து தேவைகளுக்கும் ஏற்ப 'டிரோன்கள்' களமிறக்கப்படும். போக்குவரத்திற்கும் வீடுகளில் பொருட்கள் விநியோகத்திற்கும் அவசர காலங்களில் உதவி செய்யவும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் டிரோன்கள் பயன்பாட்டை அதிகரிக்க நாடு முயற்சி செய்து வருகிறது.
"மத்திய அரசின் புதிய 'டிரோன்' கொள்கையை நாட்டின் இளைஞர்கள் உரிய முறையில் பயன்படுத்த வேண்டும்" என்று பிரதமர் மோடி மேலும் தெரிவித்தார்.
மத்திய கலாசார அமைச்சின் சார்பில் நாடு தழுவிய கோலப் போட்டி நடத்தப்படும் என்றும் தமது உரையில் அவர் அறிவித்தார்.

