ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்
சூடு; மூன்று வீரர்கள் மரணம்
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா இயக்க தீவிரவாதி ஸியா முஸ்தபாவைக் கொண்டு, பாடா டூரியன் வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கும் மறைவிடத்தைக் கண்டுபிடிப்பதற்காக ராணுவம் மற்றும் போலிசாரை உள்ளடக்கிய குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த வேட்டையில் தேடுதல் குழுவினர் தீவிரவாதிகளின் மறைவிடத்தை நோக்கி நெருங்கும்போது பயங்கரவாதிகள் சுட்டதில் ஒரு ஜே.சி.ஓ. வீரர் மற்றும் மூன்று ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்று தினத்தந்தி தகவல் தெரிவித்தது.
மக்களுக்கு தொல்லை தருவதில்
மோடி சாதனை: பிரியங்கா காந்தி
புதுடெல்லி: மக்களுக்குத் தொல்லை தருவதில் மோடி அரசு புதிய சாதனைகள் படைத்து வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் வேலை வாய்ப்பின்மை, அரசு சொத்துகள் விற்பனை, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருப்பதாகவும் இது போன்ற முறையில்தான் மோடி அரசு சாதனைகளைப் படைத்து வருவதாகவும் பிரியங்கா காந்தி டுவிட்டர் பதிவில் குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கிடையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து வரும் நவம்பர் 14ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில்
பெயர் மாற்றங்கள்
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஃபைசாபாத் ரயில் நிலையத்தின் பெயர் அயோத்தி கன்ட்டோன்மென்ட் ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது.
ரயில் நிலையத்தின் பெயரை மாற்றும் முடிவுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்து உள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஃபைசாபாத்தின் பெயரை அயோத்தி என்றும் அலகாபாத்தின் பெயரை பிரயாக் ராஜ் என்றும் யோகி ஆதித்யநாத் அரசு பெயர் மாற்றம் செய்திருந்தது.
முகல் சராய் ரயில் நிலையத்தின் பெயர் பண்டிட் தீன்தயாள் முகேபாத்யாய் ரயில் ஜங்ஷன் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

