புலந்த்சாகர்: ஒருவர்க்குச் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை இன்னொருவர்க்குச் செய்ததால் ஆடவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்தது.
யூசுஃப் சைஃபி என்ற 45 வயது ஆடவர், டெங்கிக் காய்ச்சலுக்காக புலந்த்சாகரில் உள்ள சுதிர் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
அதே பெயரைக் கொண்ட இன்னொருவரும் தீவிர சிறுநீரகப் பிரச்சினைக்காக அம்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
"பெயரால் ஏற்பட்ட குழப்பத்தால் ஆளை மாற்றி அறுவை சிகிச்சை செய்து, அதனால் உயிரிழப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது," என்றார் புலந்த்சாகர் தலைமை மருத்துவ அதிகாரியான டாக்டர் வினய் குமார் சிங்.
இதனையடுத்து, மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது, மருத்துவர் ஒருவர், பணியாளர்கள் இருவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அம்மூவரும் தலைமறைவாகிவிட்டனர்.
இதனிடையே, உடலுறுப்புகளைத் திருடும் முயற்சி இது என்று கூறி, சைஃபியின் குடும்பத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அக்குற்றச்சாட்டுகளை டாக்டர் வினய் குமார் மறுத்தார்.
இந்நிலையில், "உடற்கூராய்வில் சைஃபியின் உடலில் பித்தப்பை காணப்படவில்லை. அது திருடப்பட்டுவிட்டதாக சைஃபியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். என்ன நடந்தது என்பது விசாரணைக்குப் பிறகு தெளிவாகத் தெரியவரும்," என்றார் புலந்த்சாகர் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர்.

