பெங்களூரு: இந்தியாவின் கர்நாடக மாநிலம், பெங்களூரு விமான நிலையத்தில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரைக் கண்டதும் நான்கு வயதுச் சிறுவன் வணக்கம் செலுத்தி, மரியாதை செய்த நிகழ்வு பலரது மனங்களைக் கவர்ந்துள்ளது.
வீர் அர்ஜூன் என்ற அச்சிறுவன், தன் தந்தையின் கையைப் பிடித்தபடி விமான நிலையத்தை நோக்கிச் சென்றான். அப்போது, பாதுகாப்புப் படைவீரர் ஒருவர் வாகனத்தில் இருந்தபடி பணியில் ஈடுபட்டு இருப்பதைக் கண்டதும், அப்படியே நின்றான் வீர்.
பின்னர் அவ்வீரரை நோக்கித் திரும்பி நின்று, வலக்கையை உயர்த்தி, அவன் வணக்கம் செய்தான். அதனைக் கண்டதும், அவ்வீரரும் புன்னகைத்தவாறே அச்சிறுவனுக்குப் பதில் வணக்கம் செய்தார்.
இந்நிகழ்வு இம்மாதம் 18ஆம் தேதி நிகழ்ந்தது.
இக்காணொளியை வீரின் தந்தை எம்.எஸ்.அர்ஜூன், டுவிட்டரில் பகிர்ந்துகொண்டார். காணொளியை தம் மனைவி எடுத்ததாக அவர் கூறினார்.
காணொளியைக் கண்ட மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், அதனைப் பகிர்ந்துகொண்டதோடு, "சீருடையில் இருந்த நமது பாதுகாப்புப் படை வீரர்க்கு இளம் இந்தியரின் வணக்கம். இளம் வயதிலேயே மரியாதையும் நாட்டுப்பற்றும் கற்றுக்கொள்ளப்படுகிறது," என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பல நூறாயிரம் பேர் இக்காணொளியைக் கண்டு, சிறுவன் வீரின் செயலைப் பாராட்டி வருகின்றனர்.

