பெங்களூரு: அதிக நினைவாற்றல், கோள்களை வரைதல், இணைய விளையாட்டுகளை உருவாக்குதல், கணினி 'கிராஃபிக்ஸ்' வடிவமைப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் பெங்களூருவைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளான்.
ஸ்ரீவிஜய், வசந்தி தம்பதியரின் மகனான தருண், இரண்டு வயதிலேயே விண்வெளி தொடர்பான விவரங்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டியுள்ளான்.
மலேசியாவில் வசித்தபோது தனது மகன் அதிக நினைவாற்றல் கொண்ட குழந்தை என்ற விருதைப் பெற்றதாகக் கூறுகிறார் வசந்தி.
பின்னர், இதற்காக இந்திய சாதனை புத்தகத்திலும் தருணின் பெயர் இடம்பெற்றது. மகனின் திறமையை அறிந்த வசந்தி, தாம் பணியாற்றி வந்த நிறுவனத்தில் இருந்து விலகியுள்ளார். பிறகு மகனின் திறமையை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஐந்து வயதுக்குள் அனைத்துலக விண்வெளிப் போட்டியில் பங்கேற்ற தருணுக்கு 59வது இடம் கிடைத்துள்ளது. இதையடுத்து, விண்வெளிக் கோள்கள் குறித்த எத்தகைய கேள்விக்கும் பதில் அளிப்பது, கோள்கள் தொடர்பான படங்களை வரைவது ஆகியவை மூலம் அசத்தி வருகிறான் இந்தச் சிறுவன்.
கணினி விளையாட்டை உருவாக்குவது, 'கிராஃபிக்ஸ்' தொழில்நுட்பத்தை திறம்படப் பயன்படுத்துதல் எனப் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தியதற்காக உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளான் தருண்.
தற்போது செயலிகளை உருவாக்குவது, முப்பரிமாண 'அனிமேஷன்' ஆகியவற்றில் கவனம் செலுத்தி வரும் சிறுவன் தருணின் திறமையை அறிந்த இஸ்ரோ தலைவர் சிவன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

