உத்தரப் பிரதேசத்தில் ஸிக்கா பாதிப்பு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ஸிக்கா கிருமி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கான்பூர் நகரில் பணியாற்றி வரும் இந்திய விமானப் படை அதிகாரி ஒருவருக்கு இந்த பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 22 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளன. மேலும் அவர் வசிக்கும் பகுதியில் வீடு வீடாகச் சென்று பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தரகாண்டில் கனமழை, நிலச்சரிவால் பலியானோர் எண்ணிக்கை 72 ஆனது
டேராடூன்: உத்தரகாண்டில் கனமழை, நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 72ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் நைனிடால் உள்ளிட்ட அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் ஆயிரக்கணக்கான மக்கள் அவதிக்குள்ளாகி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கனமழையால் இருநூறுக்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ராணுவத்தினரும் தேசிய பேரிடர் மேலாண்மை விரைவுப்படையினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அன்றாட தொற்று எண்ணிக்கை 15 ஆயிரத்துக்கும் கீழ் பதிவு
புதுடெல்லி: இந்தியாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கொரோனா கிருமித்தொற்றுப் பாதிப்பின் அன்றாட எண்ணிக்கை 15 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி உள்ளது. நேற்று முன்தினம் புதிதாக 14,306 பேருக்கு கிருமி தொற்றியுள்ளது. ஒரே நாளில் மேலும் 443 பேர் மாண்டுவிட்டனர். இதன் மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 454,712 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இப்போது 167,695 பேர் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் 1.2 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பத்து லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை: பிரியங்கா அறிவிப்பு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சுகாதாரத்துறை சரியாக இயங்கவில்லை என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார். இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறியுள்ளார். கொரோனா காலத்திலும்கூட மக்களுக்கு ஏற்பட்ட துயரங்களுக்கு அரசு நிவாரணங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து நோய்களுக்கும் பத்து லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தமது டுவிட்டர் பதிவில் பிரியங்கா குறிப்பிட்டுள்ளார்.
சென்னைக்கு செம்மரம் கடத்த முயன்ற ஆறு பேர் ஆந்திராவில் கைது
அமராவதி: திருப்பதியில் இருந்து சென்னைக்கு செம்மரம் கடத்த முயன்ற ஆறு பேரை ஆந்திர போலிசார் கைது செய்துள்ளனர். திருப்பதி, சித்தூர் நெடுஞ்சாலையில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலிசாருக்கு அப்பகுதியில் சிலர் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலிசார் அருகே உள்ள பகுதியில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டர். அப்போது ஆறு பேர் கொண்ட கும்பல் செம்மரங்களை காரில் ஏற்றிக்கொண்டு இருப்பதைக் கண்டனர். இதையடுத்து ஆறு பேரும் கைதாகினர். சென்னையில் உள்ள இவர்களுடைய கூட்டாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலிசார் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானாவில் மாவோயிஸ்டுகள் மூன்று பேர் சுட்டுக்கொலை
ஹைதராபாத்: தெலுங்கானாவில் போலிசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நேற்று துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மாவோயிஸ்டுகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நிகழ்ந்த வெங்கடாபூர் பகுதியில் போலிசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

