மும்பை: மகாராஷ்டிராவில் நடப்பாண்டில் அன்றாட தொற்று எண்ணிக்கை முதன்முறையாக ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி உள்ளது.
அங்கு நேற்று முன்தினம் புதிதாக 889 பேருக்கு கிருமி தொற்றியது.சுமார் 17 மாதங்களுக்குப் பிறகு அங்கு பதிவான ஆகக்குறைவான பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.
மேலும் 18 மாதங்களுக்குப் பிறகு அன்றாட பலி எண்ணிக்கையும் ஆகக்குறைவாக 12 பேர் என பதிவாகி உள்ளது. 32 மாவட்டங்களில் கொரோனா தொற்று மரணம் ஏதும் பதிவாகவில்லை.
இதற்கிடையே, ஒடிசாவில் 18 மாதங்களுக்குப் பிறகும் கர்நாடகாவில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
மேற்கு வங்கத்திலும் நவம்பர் 19ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ளூர் ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அம்மாநில ரயில்வே துறை கூடுதல் ரயில்களை இயக்க ஆலோசனை நடத்தி வருகிறது.
நாட்டில் தொற்றுப்பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து வெளிநாடுகளுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி ஏற்றுமதி தொடங்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம் நாடு முழுவதும் புதிதாக 12,428 பேருக்கு கிருமி தொற்றியுள்ளது. மேலும் 356 பேர் மாண்டுவிட்டனர். இவர்களில் 53 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 25% உணவகங்கள் கொரோனா நெருக்கடி காலத்தில் மூடப்பட்டுவிட்டதாக அண்மைய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மற்ற துறைகளைப் போலவே உணவுச் சேவைத்துறையும் கடும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

