ஆதாரங்களைக் கலைத்து விசாரணையை தாமதப்படுத்த முயற்சி செய்வதாகப் புகார்
மும்பை: நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் (படம்) போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு குற்றம்சாட்டி உள்ளது. இதையடுத்து போதைப்பொருள் வழக்கில் அவர் மீதான பிடி இறுகுகிறது.
23 வயதான ஆர்யன் கான் சொகுசுக் கப்பலில் நடைபெற்ற கேளிக்கை நிகழ்வில் போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதானார்.
விசாரணை தீவிரமடைந்த நிலையில், அவர் கடத்தலில் ஈடுபட்டார், ஆதாரங்களை அழிக்க முற்பட்டார் என கூடுதல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஆர்யன் கானின் பிணை மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது அவர் மீது போதைப்பொருள் தடுப்புப் பிரிவு வழக்கறிஞர் புதிய குற்றச்சாட்டுகளை சுமத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தனது மேலாளர் பூஜா தத்லானி என்ற பெண்மணியுடன் சேர்ந்து ஆர்யன் ஆதாரங்களை அழிக்க முற்பட்டதாகவும் விசாரணையை இழுத்தடிக்க முயற்சி நடப்பதாகவும் அவர் சாடினார்.
மேலும் வாட்ஸ் அப்பில் ஆர்யன் கானுக்கும் இந்தி நடிகை அனன்யா பாண்டேவுக்கும் இடையே நடைபெற்ற தகவல் பரிமாற்றமும் சுட்டிக்காட்டப்பட்டது. இருவரும் கொகைன் போதைப்பொருள் குறித்து உரையாடியதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தரப்பு தெரிவித்தது.
ஆர்யன் கான் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், சில அரசியல் பிரமுகர்களும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் மண்டல இயக்குநர் சமீர் வான்கடேவும் தெரிவித்து வரும் கருத்துகளுக்கும் ஆர்யன் கானுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றார்.
ஆர்யனுக்கு பிணை வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்யன் தரப்பு ஆதாரங்களை அழிக்க முற்படுவதாகவும் சாட்சிகளைக் கலைக்க முயற்சி செய்வதாகவும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சாடியது.
"அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பலில் இடம்பெற்றுள்ள, வெளிநாடுகளைச் சேர்ந்த சிலருடன் ஆர்யன் கான் தொடர்பில் இருந்துள்ளார். அவர் போதைப்பொருளை பயன்படுத்தியதுடன் அல்லாமல் கடத்தலிலும் ஈடுபட்டார் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது," என்று போதைப்பொருள் தடுப்புப்பிரிவு மும்பை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

