ஆந்திராவில் அதிபர் ஆட்சி: சந்திரபாபு நாயுடு வலியுறுத்து
அமராவதி: ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ள தாகவும் அம்மாநிலத்தில் அதிபர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி உள்ளார். ஆந்திர மக்கள் தினந்தோறும் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகவும் மாநில அரசால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதம், ஜனநாயகம் ஆகியன அரசின் கட்டமைப்பை அச்சுறுத்தும் வகையில் கற்பனை செய்ய முடியாத உச்சத்தை எட்டியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சர்: மின் தட்டுப்பாடு இல்லை
புதுடெல்லி: மத்திய அரசிடம் சுமார் 80 லட்சம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார். எனவே, மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்று அவர் கூறியுள்ளார். எனினும் நிலக்கரி இந்தியா நிறுவனத்துக்கு மத்திய மின்சாரத்துறை ரூ.16 ஆயிரம் கோடி பாக்கி வைத்திருப்பதாகவும் மின்சாரம் இலவசம் இல்லை என்பதை மாநிலங்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடிய காஷ்மீர் மாணவர்கள் மீது வழக்கு
ஸ்ரீநகர்: உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி கண்டது. இந்நிலையில், காஷ்மீர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலர் பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடினர். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியா னது. இதையடுத்து அவர்களில் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு கண்காணிப்புக் குழுவுக்கு உத்தரவு
புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணையில் அதிகபட்சமாக எவ்வளவு நீரை தேக்கி வைக்க முடியும் என்பது குறித்து இருமாநில அரசுகளுடன் அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழுவுக்கு கலந்தாலோசிக்க வேண்டும் என உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று முன்தினம் அணையில் இருந்து அதிக பட்ச தண்ணீரைத் திறந்துவிட கோரி கேரள முதல்வர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
அடுக்குமாடி வீட்டில் தீ விபத்து: நால்வர் உடல் கருகி பலி
புதுடெல்லி: அடுக்குமாடி வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி நால்வர் பலியாகினர். இதனால் டெல்லியின் சீமாபுரி பகுதியில் பரபரப்பு நிலவியது. மூன்று மாடிகளைக் கொண்ட அந்த வீட்டில் நேற்று அதிகாலை வேளையில் இந்த விபத்து நிகழ்ந்தது. மூன்றாவது மாடியில் உள்ள அறையில் நால்வரும் தூங்கிக் கொண்டிருந்தனர். வீட்டில் தீப் பற்றியதை அறியாமல் உறங்கியவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

